ராணுவ மேஜர் ஜெனரலாக தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் ஃப்ளோரா பதவி உயர்வு பெற்றது தொடர்பான ட்விட்டர் பதிவை நீக்கியதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்திய ராணுவம் மீண்டும் அதைப் பதிவிட்டுள்ளது.
சமீபத்தில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் ஃப்ளோரா, இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது பதவி உயர்வு தொடர்பான பதிவு, வடக்கு மண்டல ராணுவத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தப் பதிவினை ரீட்விட் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இக்னோசியஸ் டெலோஸ் ஃப்ளோராவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்தில், `பெண்களால் முன்னேறக் கூடும் – நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்! மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலோஸ் ஃப்ளோராவின் சிறப்பான சாதனைக்கு வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண்மணி மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது மிகச்சிறந்த மைல்கல். அவரின் பணிக்கும் சேவைக்கும் ஆர்வத்திற்கும் சல்யூட்ஸ்!’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஃப்ளோராவின் பதவி உயர்வு குறித்த பதிவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ரீடிவிட் செய்திருந்தது நீக்கப்பட்டிருந்தது. பதிவினை நீக்கிய ராணுவத்தின் செயலுக்கு, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு, வடக்கு மண்டல ராணுவத்துக்கு சென்னை மண்டல பாதுகாப்புத்துறை பி.ஆர்.ஓ கடிதமும் எழுதியிருந்தார்.
பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழக பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கியது தொடர்பான பதிவு, மீண்டும் பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், தமிழகத்தில் இருந்து தேர்வான முதல் பெண் ராணுவ ஜெனரலை வாழ்த்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.