புதுடெல்லி,
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் சூர்யா தலைமையிலான குழு பெரும் பணக்காரர்கள் வீட்டில் போலியான வருமான வரிசோதனை நடத்தி பணத்தை சுருட்டுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. ஆனால் அந்த மோசடி கும்பலுக்கு பணம் கிடைக்கவில்லை. மாறாக அவர்கள் போலீசில் சிக்கிக்கொண்டனர்.
டெல்லியின் ஜனக்புரி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் குல்ஜித் சிங். பெரும் கோடீஸ்வரரான இவரது வீட்டில் ரூ.400 முதல் ரூ.500 கோடி இருப்பதாக வருமான வரித்துறையில் ஊழியராக பணியாற்றும் தீபக் காஷ்யப் என்பவருக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, தீபக் காஷ்யப் தனது நண்பரான போலீஸ் ஏட்டு குல்தீப் சிங்குடன் கூட்டு சேர்ந்து, தொழிலதிபர் வீட்டில் போலி வருமான வரி சோதனை நடத்தி பெரும் தொகையை சுருட்ட திட்டம் தீட்டினார்.
அதன்படி ஒரு பெண் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல தொழிலதிபர் குல்ஜித் சிங் வீட்டுக்குள் புகுந்தது. குல்ஜித் சிங் வீட்டில் இருக்கும்போது சோதனை நடத்த வேண்டும், அப்போதுதான் அவரை மிரட்டி ரூ,10 முதல் ரூ.15 கோடி சுருட்ட முடியும் என்பது மோசடி கும்பலின் திட்டம். ஆனால் அவர்கள் சென்ற நேரத்தில் குல்ஜித் சிங் வீட்டில் இல்லை. இதையடுத்து, போலியாகச் சோதனை நடத்தியதில் எதுவும் கிடைக்காததால் அந்த மோசடி கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் குல்ஜித் சிங் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது போலியான வருமான வரி சோதனை நடத்தப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தொழிலதிபரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மோசடி கும்பலை அடையாளம் கண்ட போலீசார் போலீஸ் ஏட்டு குல்தீப் சிங், வருமான வரித்துறை ஊழியர் தீபக் காஷ்யப் உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள ஒரு பெண் உள்பட 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.