புதுச்சேரி: வலையில் நாய்கள் டு திரைசீலை சாலைகள்… ஜனாதிபதி வருகையும் குஜராத் மாடல் ஏற்பாடுகளும்!

புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக இன்று வந்திருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மணக்குள விநாயகர் கோயில், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயில், அரவிந்தர் அசிரமம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபடுகிறார். அதேபோல கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் அவர், முருங்கப்பாக்கம் கைவினை கிராமம், ஆரோவில் மாத்ரி மந்திர் போன்ற இடங்களுக்குச் சென்று பார்வையிடுகிறார். அதேபோல கடற்கரை சாலையிலுள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். 8-ம் தேதி காலை 6 முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி  மேற்கொள்கிறார். அங்கிருக்கும் கல் மேடைகளில் அவர் அமர்வதற்காக சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளன. அவர் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் அன்று அதிகாலை 4 முதல் 7 வரை வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவசரகதியில் முன்னேற்பாடு பணிகள்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு முக்கியம் என்ற வகையில் இதை ஏற்றுக் கொண்டாலும், அரவிந்தர் ஆசிரமம், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமை செயலகம், பிரெஞ்சு தூதரகம் மற்றும் கடற்கரை சாலை பகுதிகளில் சுற்றித் திரிந்த வீதி நாய்களை துரத்தி துரத்திப் பிடித்து அப்புறப்படுத்தினர் நகராட்சி ஊழியர்கள். நகராட்சியின் அந்த செயலால் கடுப்பான விலங்குகள் நல ஆர்வர்லர்கள், ‘கருத்தடை செய்யப்பட்ட நாய்களை பிடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தும் ஏன் பிடிக்கிறீர்கள் ? நாய்களும் ஒரு உயிர்தான். நாய்களை பிடித்துக் கொண்டுபோய் நகராட்சி கொன்று புதைத்து விடுகிறது’ என்ற குற்றச்சாட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிடித்துச் செல்லப்பட்ட அந்த நாய்கள் என்ன ஆனது என்பது ஒருபுறமிருக்க, ‘இந்த கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன், தினமும் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்கின்றனர். அவர்களில் எத்தனை பேரை இந்த நாய்கள் கடித்திருக்கின்றன? அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் வரை கலந்துகொள்ளும் புதுச்சேரியின் சுதந்திரதின விழா இந்த கடற்கை சாலையில்தான் ஆண்டுதோறும் நடக்கிறது. அப்போதெல்லாம் அமைதியாக இருக்கும் நகராட்சி நிர்வாகம், இப்போது மட்டும் சலங்கை கட்டி ஆடுவது ஏன்? அமைச்சர்கள், பொதுமக்களை நாய்கள் கடித்தால் பரவாயில்லையா?’ என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

அகற்றப்பட்ட திரைச்சீலை – ஜூ.வி செய்தி எதிரொளி

அதேபோல மறைமலை அடிகள் சாலையில் உப்பனாற்றுப் பாலம் கட்டி முடிக்கப்படாமல் 15 ஆண்டுகளாக அரைகுறையாக நிற்கிறது. அதையும் அந்த கழிவுநீர் கால்வாயையும் குஜராத் ஸ்டைலில் பிரம்மாண்ட திரைச் சீலைகளை தொங்கவிட்டு மறைத்தனர் நகராட்சி ஊழியர்கள். விகடனில் வெளியான அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்க, உடனே அந்த திரைச் சீலைகளை அப்புறப்படுத்தியது மாநகராட்சி.

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த போது, சாலைகள் ஓரம் இதே போன்று துணிகள் வைத்து மூடப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஜனாதிபதி செல்லும் வழியில் துருப்பிடித்துக் கிடந்த மின்சாரப் பெட்டியை பழுது மட்டும் பார்த்து, கிஃப்ட் காகிதம் கொண்டு சுற்றி மறைத்திருந்தார்கள். அந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக, இரவோடு இரவாக காகிதத்தை கிழித்துப் போட்டுவிட்டு பெயிண்ட் அடிக்க அதுவும் ட்ரோல் மெட்டீரியல் ஆனது. மேலும் ஜனாதிபதி செல்லும் சாலைகள் அனைத்தும் அவசர அவசரமாக போடப்பட்டது. அதில் பல சாலைகள் ஏற்கெனவே போட்டப்பட்டிருந்த சாலைகள். அரும்பார்த்தபுரம் பகுதியில் அவசரமாக சாலை போட்டுக் கொண்டிருந்தபோது, சாலைக்கு நடுவில் ஆளும் கட்சியினரின் பேனர்கள் வரிசைகட்டி நிற்க, அந்த இடத்தை மட்டும் அப்படியே விட்டுவிட்டு மீதி சாலையை போட்டு முடித்திருந்தனர்.

திரௌபதி முர்மு புதுவை வருகை – முன்னேற்பாடு பணிகள்.

நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் இன்னும் சாலைகள் பஞ்சரான நிலையில்தான் இருக்கின்றன. ஆனால், ஏனோதானோவென்று தற்போது  போடப்பட்டிருக்கும் சாலைகள் பல இடங்களில் கைகளால் தோண்டினாலே பெயர்ந்து விடும் தரத்தில்தான் காணப்படுகின்றன.

அதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில், சாலையின் ஓரத்தில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க கொடியுடன் கார் ஒன்று நிற்க, அதையும் அப்படியே விட்டுவிட்டு காரை தாண்டி பெயிண்ட் அடித்திருப்பதும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நகரின் பெரும்பகுதி வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில்,  பள்ளிப் பேருந்துகளுக்கும் அனுமதி கிடையாது என்று நேற்று அறிவித்தது போக்குவரத்துக் காவல் துறை. அதனால் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டிருந்தனர் பெற்றோர். அத்துடன் இந்த கடைசி நேர அறிவிப்பு பெற்றோருக்கு  சென்று சேராததால் பெரும்பாலான மானவர்களால் பள்ளிக்கு செல்ல முடியாமல் போனதும் கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.