சென்னை புளியந்தோப்பு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் ராஜேந்திரன். இவர் மதங்கள் குறித்து சர்ச்சைக் கருத்தை பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
கிறிஸ்டோபர் என்பவரிடம் ராஜேந்திரன் பேசுவதாகச் சொல்லப்படும் அந்த ஆடியோவில், “கிறிஸ்டோபர், நீங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவுசெய்த பாட்டு, சரியான பாட்டு கிடையாது. கிறிஸ்துவப் பாடல்களை எல்லாம் கேட்டுப் பாருங்கள் கிறிஸ்டோபர். `அல்லேலுயா’ என்று கத்துவார்கள்.
முடவர்கள் எழுந்து நடப்பார்கள். இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள். இது எல்லாம் தவறு. நான் பேசக் கூடாது என்று அமைதியாக இருக்கிறேன். இது இந்திய நாடு. ராம ஜென்ம இடத்தில் கோயில் கட்டியிருக்கிறோம். இது இந்திய நாடு. கோயிலில் பூஜை செய்வார்கள்.
நாடாளுமன்றத்தில் செங்கோல் வாங்குவோம். உங்களால் முடிந்தால் தடுத்து நிறுத்தி பாருங்கள். முடியவில்லை என்றால் பாகிஸ்தான், சவுதிக்குச் செல்லுங்கள். இது ரொம்ப தப்பு. ராம ராஜ்ஜியம் நடக்கும். கிறிஸ்டோபர் இந்த மாதிரி பாட்டு போடாதீங்க, நீங்கள் அப்படி போட்டால் நாங்களும் கிறிஸ்துவ மதத்தில் போலியாக நடிப்பார்கள் அல்லவா… அதை நானும் போடுவேன்” என்பதோடு ஆடியோ முடிவடைகிறது. இந்த ஆடியோ வைரலானதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “புளியந்தோப்பு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் மதம் தொடர்பான கருத்துகளை ஆடியோவாகப் பதிவிட்டிருந்தார். அது தொடர்பாக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், ராஜேந்திரன் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.