உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமான நடிகை ‘அங்காடித் தெரு’ சிந்துவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும், சீரியல்கள் சிலவற்றிலும் நடித்தவர் நடிகை சிந்து. இயக்குநர் வசந்த பாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு’ படம் இவரை பளிச்சென அடையாளம் காட்டியதெனச் சொல்லலாம்.
சில வருடங்களுக்கு முன் மார்பகப் புற்று நோய் இவரைத் தாக்கியது. நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டுவந்தார். மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான நிதி வசதியும் அவரிடம் இல்லை.
சினிமாத்துறையினர் சிலர் சில உதவிகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ‘அங்காடித் தெரு’ படத்தில் இவருடன் நடித்த ‘பிளாக்’ பாண்டியும் சமீப சில ஆண்டுகளாக இவருக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தார்.
பாண்டியிடம் சிந்துவின் மறைவு குறித்துப் பேசினோம்.
“ஆரம்பக் காலத்துலயே கண்டுபிடிச்சிருந்தா ஓரளவு குணப்படுத்தியிருக்கலாமோ என்னவோ? உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ரொம்பவே கஷ்டத்தை அனுபவிச்சிட்டாங்க. விருப்பப்பட்ட நடிப்பைத் தொடர முடியாமப்போச்சு. நிறைய செலவழிச்சும் எந்தச் சிகிச்சையும் கைகொடுக்கலை.
அதனால ஒருகட்டத்துல ‘விதி வழி நடக்கட்டும் பாண்டி’ன்னு மனசு உடைஞ்சிட்டாங்க. ஒரே மகள்தான் அவங்ககூட இருந்து அவங்களைக் கவனிச்சிட்டிருந்தாங்க. அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வருமானத்துக்கு உதவியா இருக்கட்டுமேன்னு ‘உதவும் மனிதம்’ ட்ரஸ்ட் மூலமா தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தோம்” என்கிற பாண்டி இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்.
“தன்னுடைய நிலைமையே மோசம்கிற சூழல்லயும் கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைச்சாங்க. சக நடிகை பிந்துகோஷ் கஷ்டப்படறாங்கன்னு செய்தி வந்ததும் என்னைக் கூப்பிட்டு, அவங்களுக்கு ஏதாவது செய்யணும், நீ ஏற்பாடு செய், என்னால் முடிஞ்சதை நான் தர்றேன்’ன்னு தந்தார்” என்கிறார் பாண்டி.