புதுடெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ம்க்களவையில் பேசவிருக்கிறார். பகல் 12 மணியளவில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை ராகுல் தொடங்காதது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் வட்டாரம் சார்பில் இரண்டு காரணங்களை முன்வைத்துள்ளது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பாஜக கூட்டணி, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் இடையே மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் விவாதத்தை தொடங்கினார். இதன் பின்னணி தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் இரண்டு காரணங்களை முன்வைக்கின்றன.
முதல் காரணம்: கவுரவ் கோகோய் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்தவர். மற்றொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிகழும் வன்முறை குறித்து கோகோய் பேச்சைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதியதால் அவர் பேசவைக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ராகுல் காந்தியை பேச வைத்திருந்தால், எப்போதும் காங்கிரஸ் மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைக்கும் பாஜகவுக்கு அது விமர்சனங்களுக்கான புள்ளியாகும் என்பதால் ராகுல் பேசவைக்கப்படவில்லை.
இரண்டாம் காரணம்: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கிய முதல் நாளில் பிரதமர் அவைக்கு வரவில்லை. பிரதமர் மோடி நாளை 10 ஆம் தேதிதான் அவைக்கு வருவார் எனத் தெரிகிறது. அதனால் முதல் நாளிலேயே ராகுல் காந்தியை பேச வைத்துவிட்டால் அடுத்து பிரதமரின் பேச்சுக்காக அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பர். பிரதமர் தான் பேசு பொருளாகி அவர் மீதே அனைத்து கவனமும் குவியும். இந்தச் சூழலைத் தவிர்க்க முதல் நாளில் ராகுலை பேசவைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பகல் 12 மணியளவில் ராகுல் காந்தி உரையாற்ற இருக்கிறார். ராகுல் பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியாகிகளுக்கு அஞ்சலி: மக்களவை இன்று (புதன்கிழமை) கூடியவுடன் உறுப்பினர்கள் 1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போராட்டங்களில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்ட 78வது ஆண்டை ஒட்டி அஞ்சலி செலுத்தினர்.
எதிர்க்கட்சிகள் முழக்கம்: மவுன அஞ்சலிக்குப் பின்னர் அவையில் அலுவல் தொடங்கிய உடனேயே காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி அவைக்கு வராதது ஏன் என்று கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.