விஜய்யின் `லியோ’ இரண்டு பாகங்களாக வரவிருக்கிறது என்பதே விஜய் ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளத்திலும் பேச்சாக இருக்கிறது. லோகேஷ் அடுத்து ரஜினியை இயக்குகிறார் என்பதை அவரே உறுதிப்படுத்திய நிலையில், இப்போது இப்படி ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது. இது உண்மைதானா?
‘மாஸ்டர்’ படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் மீண்டும் கைகோத்திருக்கும் படம் ‘லியோ.’ இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த், அனுராக் காஷ்யப் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. திரைக்கதையை லோகேஷுடன் இணைந்து ரத்னகுமார், தீரஜ் வைத்தி இருவரும் எழுதியுள்ளனர். ‘பீஸ்ட்’ மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த மாதமே படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனாலும், காஷ்மீரில் படமாக்கிய போர்ஷன்களில் சில பேட்ச் ஒர்க் இருப்பதால், விஜய்யைத் தவிர த்ரிஷா உட்பட பலரும் தற்போது காஷ்மீர் சென்றிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 15, அர்ஜுனின் பிறந்தநாள் வருகிறது என்பதால், ‘லியோ’வில் அவரது கெட்டப் வெளியாக உள்ளது என்று சொல்கிறார்கள். இந்நிலையில் ‘லியோ’ இரு பாகங்களாக ரெடியாகியுள்ளது என்ற பேச்சும் நிலவுகிறது. இதுகுறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்தோம்.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தின் க்ளைமாக்ஸ் அதன் அடுத்த பாகத்திற்கு இன்ட்ரோவாக அமைந்திருக்கும். ஆனால் அவர் ‘கைதி 2’ உடனே இயக்காமல் போனதற்குக் காரணம், லோகேஷ், கார்த்தி இருவரின் அடுத்தடுத்த கமிட்மென்ட்களால்தான். ‘கைதி 2’ உடனே உருவாகாமல் போனது.
விஜய்யின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு இடைவேளையில்தான் கமலை சந்தித்து ‘விக்ரம்’ படத்தின் கதையைச் சொன்னார். ‘விக்ரம்’ உருவானது. அதன்படி, ‘லியோ’ படப்பிடிப்பின் இடைவேளையில் ரஜினியிடம் ஒரு கதை சொல்லிவிட்டார். ஒரு பக்கம் அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அதனை முடித்துவிட்டுத்தான் கார்த்தியின் ‘கைதி 2’-க்குள் வருகிறார் லோகேஷ்.
அதைப் போல விஜய் அடுத்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கிறார். அதை முடித்துவிட்டு ‘ஜில்லா’ நேசன் இயக்கத்தில் நடிக்கிறார் என்ற பேச்சு உள்ளது. இதற்கடுத்தே ‘லியோ’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இருக்கலாம் என்கிறார்கள். அதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும், ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ ஆகக் கலக்கியதைப்போல, ‘லியோ 2’ல் கமல் ரோல் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதற்கான விடை ‘லியோ’ ஒன்றில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.