விஜய், சூர்யா, வடிவேலு இணைந்து நடித்த `ப்ரண்ட்ஸ்’ படத்தை இயக்கியவர் சித்திக். கல்லீரல் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 63.
1989-ல் மலையாளத்தில் வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சித்திக். அங்கே ‘காட்பாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ எனப் பல படங்களை இயக்கினார். மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ படத்தைத் தமிழில் விஜய், சூர்யா, வடிவேலுவை வைத்து அதே டைட்டிலில் இயக்கி, வெற்றிக்கொடி நாட்டியவர் இவர்.
தமிழில் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’, பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார். சித்திக்கின் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் நகைச்சுவை நடிகராகவும், ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் டயலாக் ரைட்டராகவும் இருந்த ரமேஷ் கண்ணா, இங்கே சித்திக் நினைவுகளை கனத்த இதயத்துடன் பகிர்ந்துகொண்டார்.
“சித்திக் சார் இயக்கத்துல ‘ப்ரண்ட்ஸ்’தான் என் முதல் படம். அதுக்கு முன்னாடியே அவரைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம்னா ‘ப்ரண்ட்ஸ்’தான். இன்னிக்கு வரை நான் குழந்தைகளுக்குப் பிடிச்ச நடிகராகவும் இருக்க அந்தப் படமும் ஒரு காரணம். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டிவரை உறவு’ படங்களைத்தான் நகைச்சுவைப் படம்னு சொல்வாங்க.
ஆனா, 2001 காலகட்டங்களில் நகைச்சுவையும், எமோஷனலும் கலந்த ஒரு படம்னா ‘ப்ரண்ட்ஸ்’தான். இப்பவரை அப்படி ஒரு படம் சொல்லமுடியாது. விஜய் சாரை வச்சுதான் படத்தைத் தொடங்கினாங்க. அதன்பிறகு சூர்யா சார் வந்தார். அப்ப அவர் வளர்ந்து வரும் நடிகர். மலையாள ‘ப்ரண்ட்ஸ்’ல என் கேரக்டரை இயக்குநரும் நடிகருமான சீனிவாசன் சார் செய்திருந்தார். அதனால, அதே மாதிரி என்னை நண்பனாக நடிக்க வச்சாங்க.
படப்பிடிப்புத் தளத்துல எந்தவித டென்ஷனும் இல்லாமல் வேலை செய்வார். ஸ்பாட்டுல சிரிச்ச முகமா வேலை செய்யறது என்பது எல்லோராலும் முடியாத ஒரு விஷயம். ஆனா, சித்திக் சார், சிரிச்சமுகமா இருப்பார். ஸ்பாட்டுல அன்னிக்கு காம்பினேஷன்ல உள்ள நடிகர்கள், ‘எனக்கு சாயந்திரம் நாலு மணிக்கு வேலை இருக்கு. என்னை அனுப்பிடுங்க’ன்னு கேட்டால்கூடக் கோபப்படமாட்டார். அந்த நடிகரோட போர்ஷனை மதியம் ஒரு மணிக்கே ஷூட் செய்திட்டு, அவரோட லன்ச்சை முடிச்சதும் மதியமே அனுப்பி வச்சிடுவார்.
இதுபத்தி அவரிடம் யாராவது கேட்டால்கூட, ‘அவர் நாலு மணிக்குப் போகணுமே, அந்த ஷாட்டை எடுக்கணுமேன்னு தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். அதையெல்லாம் தவிர்க்கவே, சீக்கிரமா ஷூட் பண்ணி அனுப்பிட்டேன்’னு கூலாக சொல்வார். எந்த வித கெட்டப்பழக்கமும் இல்லாதவர். ‘ப்ரண்ட்ஸ்’ல இருந்து அவரும் நானும் நல்ல நட்பாகிட்டோம். அவர் தமிழில் பண்ணின ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு என்னைத்தான் ரைட்டர் ஆக்கினார். அதன்பிறகு நாங்க இன்னும் நெருக்கமான நட்பாகிட்டோம். அவர் தமிழில் அடுத்து படம் பண்ணணும்னு என் பிரார்த்தனைகளில் சொல்வேன். ஏன்னா, அவர் தமிழில் பண்ணினா எனக்கு ரைட்டர் வாய்ப்பு கிடைச்சிடும். இப்ப அதுக்குக் கொடுத்துவைக்காமப் போயிடுச்சு.
இறக்கறதுக்கு முன்னாடிகூட மம்மூட்டியை வச்சு, படம் பண்ணுறதுக்கான வேலைகளில் இருந்தார். அப்படி அவர் படம் பண்ணியிருந்தால் அதைத் தமிழில் எடுத்திருப்பார். எனக்கும் அதுல வேலை செய்றதுக்கான ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கும். அவரது இழப்பு எனக்கும் தனிப்பட்ட இழப்பாகிடுச்சு!” எனக் கண்கலங்குகிறார் ரமேஷ் கண்ணா.