தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சிறுபான்மை சமூகத்தை மேம்படுத்தும் வகையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு 100 சதவீத மானியத்துடன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் முதல்வர் சந்திரசேகர ராவ்.
இந்நிலையில் இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் வகையில் கடந்த ஜூலை மாதம் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக (BCs) வடிவமைக்கப்பட்ட நிதி உதவித் திட்டத்தை, தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் விரிவுபடுத்துமாறு சிறுபான்மையினர் நலத் துறைக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தினார்.
அய்யோ… சீனாவுக்கா இந்த நிலைமை… நாசமாக்கிய மழை… வெள்ளக்காடான நகரங்கள்.. அதிகரிக்கும் மரணங்கள்!
அதன்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மானியம் வழங்கப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 2, 2023 தேதியின்படி 21 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.1.5 லட்சத்திற்கும் நகர்ப்புறங்களில் ரூ.2 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வறுமையை ஒழிக்கும் முக்கிய நடவடிக்கையாக சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, ‘ரூ. 1 லட்சம் உதவி’ திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் காசோலைகளை வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 10,000 பயனாளிகளுக்கு காசோலைகளை உடனடியாக வழங்குமாறு தெலுங்கானா மாநில நிதியமைச்சர் டி ஹரிஷ் ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சிறுபான்மை மக்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உதவித் தொகை வழங்கப்படும் என்பதால், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஹரிஷ் ராவ் உத்தரவிட்டார்.
இதுதொடர்பான கூட்டம் நேற்று தெலுங்கானா செயலகத்தில் நடைபெற்ற நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் ஹரிஷ் ராவ், இதற்காக கூடுதலாக 130 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ஏற்கனவே 270 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தெலுங்கானா சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.