ஆகஸ்ட் 09 ஆந் திகதி பிற்பகுதியில் கொரியக் குடியரசின் கரையைக் கடக்கவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ள கானுன் சூறாவளியைக் கருத்தில் கொண்டு, கொரியக் குடியரசில் 25வது உலக சாரணர் ஜம்போரியில் பங்கேற்கும் இலங்கை சாரணர் குழுவினர் ஆகஸ்ட் 08 ஆந் திகதி சேமன்ஜியம் ஜம்போரி தளத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தக் குழுவினர் சியோலின் புறநகரில் உள்ள சியோனனில் உள்ள டாங்கூக் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டனர். தமது புதிய தங்குமிடத்திற்கு பாதுகாப்பாக சென்றடைந்த இலங்கை சாரணர்கள், சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளனர். சில செயற்பாடுகள் மற்றும் திட்டங்களை அவர்கள் தமது புதிய இடத்திலிருந்து தொடரவுள்ளனர்.
ஜம்போரியில் பங்கேற்கும் அனைத்து இலங்கை சாரணர்களினதும் தொடர்ச்சியான பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்காக, கொரியக் குடியரசில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சாரணர் குழுவின் நிர்வாகத்துடனும், சம்பந்தப்பட்ட தென் கொரிய அதிகாரிகளுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகின்றது.