பெங்களூரு : இந்தியாவின் தொழில்நுட்ப பூங்காவான பெங்களூரில், போக்குவரத்து நெரிசலால், ஆண்டுதோறும் 19,725 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘பிரிக்க முடியாதது எதுகையும் – மோனையும்’ என்பது போல், பெங்களூரையும், போக்குவரத்து நெரிசலையும் பிரிக்கவே முடியாது.
பெங்களூரில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகின்றன.
அறிக்கை தயாரிப்பு
இது தொடர்பாக, போக்குவரத்து நிபுணர் ஸ்ரீஹரி மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்துள்ளனர். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பெங்களூரு நகரின் சாலை திட்டம், மேம்பாலம், போக்குவரத்து மேலாண்மை, உள்கட்டமைப்பு குறைபாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப வளர்ச் சியால், வீடு, கல்வி மற்றும் பிற வசதிகள் போன்ற வளர்ச்சி அதிகரித்துள்ளது.
1.50 கோடி வாகனங்கள்
பெங்களூரில், 1.50 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நகரில் 60 மேம்பாலங்கள் இருந்தும், நெரிசல், சிக்னல்களில் நிறுத்தம், நேர இழப்பு போன்ற காரணங்களால், பெங்களூருக்கு, ஆண்டுக்கு 19,725 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
பெங்களூரு நகரின் மொத்த சாலையின் நீளம் 11,000 கி.மீ., ஆனால், தற்போதைய போக்குவரத்துக்கு இவை உகந்ததாக இல்லை.
சுரங்கப்பாதைகள்
எனவே, ரேடியல் சாலை மற்றும் வட்ட சாலையை இணைக்கும் வகையில், பிரத்யேக வட்டசாலை அமைக்க வேண்டும். இச்சாலையில், ஒவ்வொரு 5 கி.மீ.,க்கும் ரேடியல் சாலையுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளில், சுமுகமான போக்குவரத்துக்கு பல சுரங்கப்பாதை சாலை அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு 1-2 கி.மீ.,க்கு அரசு பஸ்கள், மெட்ரோ ரயிலை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையை அரசு செயல்படுத்த வேண்டும்.
இத்துடன், சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். இதன் வாயிலாக, சுமுகமான போக்குவரத்துக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்