சென்னை: அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு தொமுச பொருளாளர் கி.நடராஜன், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில், மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியும், கருப்புச் சட்டை அணிந்தும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போராட்டத்தில், “விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை திரும்பப் பெற வேண்டும், நிரந்தர வேலையில் பணிபுரியும் நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சமவேலைக்கு சம ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்துதுறைகளிலும் தற்காலிக தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது, அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 ஆக நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் (இபிஎஃப்) ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், பொதுத்துறையை தனியாருக்கு வழங்கக் கூடாது” என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசியதாவது:
தொமுச பொருளாளர் கி.நடராஜன்: மத்திய தொழிலாளர் விரோத சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது.
சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா: அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லியில் வரும் 24-ம் தேதி கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த தமிழகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் இணைந்து போராட முன்வர வேண்டும்.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்: இந்தியாவில் மழைவாழ் மக்கள், பெண்கள், குழந்தைகள், பட்டியலினத்தவர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.