இந்தியாவுக்கு புதிய பிரவுசர்
மிகப்பெரிய மக்கள் தொகை கொண்டிருக்கும் சீனா தங்களுக்கு என புதிய பிரவுசரை கொண்டிருக்கிறது. அங்கு கூகுள் மற்றும் மொசில்லா பயர்பாக்ஸ் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்க நிறுவனங்கள் என்பதால் உள்நாட்டு பாதுகாப்பு கருதி அனுமதியளிக்கவில்லை சீனா. ஆனால், இந்தியாவில் கூகுள் பிரவுசர் மட்டுமே முதன்மையான உலாவியாக உள்ளது. 88 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதனை பயன்படுத்துகின்றனர். இது மத்திய அரசுக்கு டிஜிட்டல் கொள்கைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது. ஏனென்றால் தனிநபர் தரவு பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு பாதுகாப்பும் இதில் அடங்குவதால், இதனைக் கருத்தில் கொண்டு சொந்த பிரவுசரை அடுத்த ஆண்டு இறுத்திக்குள் நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு பரிசுத் தொகை
இதற்கான பணிகளை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தொடங்கியுள்ளது.முழுக்க முழுக்க இந்தியர்களுக்காக மட்டுமே உருவாக்கப்படும் பிரவுசர் ஆகும். டிஜிட்டல் சந்தையை பொறுத்தவரை உலகளவில் இந்தியா டாப் 3-ல் இருக்கிறது. இதனை குறிவைத்து பன்னாட்டு நிறுவனங்கள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடுருவிக் கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி, இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய பிரவுசரை உருவாக்கும் பணியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு மானியம் கொடுக்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது.
நிபந்தனைகள் என்ன?
– இந்தியாவுக்கு என பிரத்யேகமாக பிரவுசர் உருவாக்குபவர்களுக்கு மத்திய அரசு 3.4 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்க இருக்கிறது.
– இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறுகுறு நிறுவனங்கள், நிறுவனங்கள் சட்டம் 2013 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட LLP-களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
– விண்ணப்பிக்கும் நிறுவனம் இந்திய குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்கள் வைத்திருக்கும் குறைந்தபட்சம் 51 சதவீத பங்குகளை வைத்திருக்க வேண்டும்.
– எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருக்கக்கூடாது.
– மேலும், உருவாக்கப்படும் புதிய பிரவுசரில் கண்டிஷன் மற்றும் விதிமுறைகளில் இந்திய அரசாங்கத்தின் இணைய பாதுகாப்பு சான்றளிப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை சேர்த்திருக்க வேண்டும்.
கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கம்
தற்போது கூகுள் மற்றும் மொசில்லா பயர்பாக்ஸ் ஆகியவை ரூட் ஸ்டோர்களில் இந்தியாவின் நியமிக்கப்பட்ட சான்றளிக்கும் ஏஜென்சியைக் கொண்டிருக்கவில்லை. ஏறக்குறைய 850 மில்லியன் பயனர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய இணைய ஜாம்பவானாக கூகுள் குரோம் உள்ளது. மேலும், இணையத்தின் தரவுகளின் அடிப்படையில் ஈர்க்கக்கூடிய 88.47 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
Safari 5.22 சதவிகிதப் பங்குடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, மைக்ரோசாப்ட் எட்ஜ் 2 சதவிகிதம், சாம்சங் இணையம் 1.5 சதவிகிதம், Mozilla Firefox 1.28 சதவிகிதம், மற்ற வீரர்கள் கூட்டாக 1.53 சதவிகிதம் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு இணைய பிரவுசர் வளர்ச்சி மற்றும் அறிமுகம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இந்த திட்டத்தில் பங்கேற்க உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.