ஓய்வுபெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்), தன் மனைவி (ரம்யா கிருஷ்ணன்), மகன் (வஸந்த் ரவி), மருமகள் (மிர்ணா), பேரன் (ரித்திக்) ஆகியோருடன் வசித்து வருகிறார். நேர்மையான காவல்துறை அதிகாரியான அர்ஜுன், சிலை கடத்தல் கும்பலைப் பிடிக்கத் தீவிரமாகச் செயல்படுகிறார். இதை விரும்பாத அந்தக் கும்பல் அவரைக் கடத்துகிறது. எதிரிகளைப் பழிவாங்கவும், தன் குடும்பத்தைக் காக்கவும் தனியாளாகக் களமிறங்குகிறார் ரஜினிகாந்த். ஓய்வுபெறுவதற்கு முன்னான ரஜினி எப்படிப்பட்டவர், சிலை கடத்தல் கும்பலின் பின்னணியில் இருப்பவர் யார், இறுதியில் எதிரிகளிடமிருந்து தன் மொத்த குடும்பத்தைக் காப்பாற்றினாரா போன்ற கேள்விகளுக்கு தன் காமெடி பாணியிலும், ரஜினிகாந்தின் மாஸ் பார்முலாவிலும் திரைக்கதை அமைத்து பதில் சொல்லியிருக்கிறார் நெல்சன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Jailer.jpg)
மாஸான காட்சிகளிலும், குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் உருகும் காட்சிகளிலும் தன் நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார் ரஜினிகாந்த். முதற்பாதியில், நெல்சன் படக் கதாநாயகர்களுக்கான உடல்மொழியையும், வசன உச்சரிப்பையும் அளவாகவும் அழகாகவும் வழங்கி விசில் வாங்குகிறார். மிடுக்கான காவல்துறை அதிகாரியாக வஸந்த் ரவி தொடக்கத்தில் கவர்கிறார். ஆனால், போகப் போகப் படம் முழுவதுமே ஒரே முகபாவனையை வழங்கி ஏமாற்றுகிறார். விநாயகன் பாத்திரம் காமெடி வில்லனா, சீரியஸ் வில்லனா என்று வாய்விட்டுக் கேட்கும் அளவுக்குக் குழப்பியிருக்கிறார்கள். ஆனால், இந்த இரட்டைக் குதிரை சவாரியை தன் சிறப்பான நடிப்பின் மூலம் சரி செய்திருக்கிறார். மிரட்டும் இடத்தில் மிரட்டி, காமெடி வேண்டிய இடத்தில் சிரிக்க வைத்து அட்டகாசம் செய்திருக்கிறார். பேரனாக ரித்திக்கின் நையாண்டி பேச்சு சில காட்சிகளில் சிரிப்பாகவும், ஏனைய இடங்களில் மிகையாகவும் தெரிகிறது.
யோகி பாபு முதற்பாதியில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். ஏனைய இடங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து போகிறார். சுனில், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் இரண்டாம் பாதி காமெடிக்கு ஓரளவிற்குக் கைகொடுத்திருக்கின்றனர். மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் தலா இரண்டு காட்சிகள் வந்தாலும், தேவையான மாஸைக் கடத்தியிருக்கிறார்கள்.
ரம்யா கிருஷ்ணன், மிர்ணா போன்ற முக்கிய பெண் கதாபாத்திரங்களை இன்னும் அழுத்தமாக எழுதி, கதைக் கருவிற்கு வலுசேர்த்திருக்கலாம். இவர்கள் தவிர, துணை காமெடியன்கள், துணை வில்லன்கள், துணை கதாபாத்திரங்கள் என ஜாக்கி ஷெராஃப், மாரிமுத்து, தமன்னா, ஜாபர் சாதிக், கிஷோர், சரவணன், அறந்தாங்கி நிஷா, விடிவி கணேஷ், நாகேந்திர பாபு ஆகியோரால் திரைக்கே மூச்சு முட்டுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Jailer_9.png)
ஒரு வழக்கமான ரஜினிகாந்த் பார்முலா மாஸ் கதையை தன் ஸ்டைலில் சொல்ல முயன்றிருக்கிறார் நெல்சன். அதில் பாதி கிணற்றைத் தாண்டியிருக்கிறார். தன் குட்டி பேரனின் யூட்யூப் சேனலுக்கு உதவிக்கொண்டு, தன் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழும் அப்புராணி கதாநாயகன் ரஜினிகாந்த், மீண்டும் மாஸாக ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் அத்தியாயத்தைப் பேசும் முதற்பாதி, நெல்சன் படமாகவும் ரஜினிகாந்த் படமாகவும் சிறப்பான கலவையாக ஜெயித்திருக்கிறது. திடீர் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ரஜினிகாந்த், யோகி பாபுவிற்கும் ரஜினிகாந்திற்குமான காமெடிகள், குடும்பத்திற்காக ரஜினி காந்த் பதறும் இடங்கள், வில்லன் விநாயகனின் மிரட்டல்கள் என எல்லாமே சரியாகக் கைகூடியிருக்கின்றன. விடிவி கணேஷுடனான காமெடி காட்சிகளால் எந்த பலனுமில்லை என்பதால், அந்தத் தொகுப்பை மொத்தமாகவே தவிர்த்திருக்கலாம்.
கோர்வையாகச் சென்ற முதற்பாதி திரைக்கதை இரண்டாம் பாதியில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. எக்கச்சக்க கதாபாத்திரங்கள், அதற்கான பின்கதைகள், நெல்சன் பாணியிலான காமெடிகளுக்கு எழுதப்பட்ட நீண்ட நீண்ட காட்சிகள் எனச் செல்லும் திரைக்கதையில் லாஜிக்கை சல்லடைப் போட்டுத் தேடி வேண்டியதாக இருக்கிறது.
இரண்டாம் பாதியில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் மிகச் சில இடங்களில் மட்டுமே நம்மைச் சிரிக்க வைக்கிறது. முதற்பாதி முழுவதும் பில்டப்புகளால் எழுதப்பட்டிருக்கும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பின்கதையில் அந்த சில நிமிட பிளாஷ்பேக் காட்சிகள் தவிர்த்து, சினிமா ஷூட்டிங், கடத்தல் முயற்சி என்று கம்பு சுற்றியிருக்கிறார்கள். ரஜினிகாந்திற்கு இணையாக எழுதப்பட்டிருக்க வேண்டிய பிரதான வில்லன் விநாயகனின் கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது. கத்துவது, வேறு வேறு மாடுலேஷனில் பேசுவது என என்னென்னமோ செய்கிறார். சிலை கடத்தலை வைத்தாவது அக்கதாபாத்திரத்திற்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Jailer_3.jpg)
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மலின் படத்தொகுப்பும் சண்டைக் காட்சிகளிலும், ரஜினிகாந்திற்கான மாஸ் காட்சிகளிலும் சிக்ஸர் அடித்திருக்கின்றன. குறிப்பாக அந்த இன்டர்வெல் பிளாக் காட்சியில் லைட்டிங் தொடங்கி, கேமரா கோணங்கள், பின்னணி இசை, ரஜினியின் நடிப்பு என அனைத்துமே மாஸ் காட்சிகளுக்கான இலக்கணமாக மாறியிருக்கிறது. இரண்டாம் பாதி காமெடி காட்சிகளில் ஆர்.நிர்மல் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தில் வந்த மூன்று பாடல்களும் சரியான இடத்தில் ‘அளவாக’ கோர்க்கப்பட்டிருப்பதால், திரைக்கதைக்குத் தொந்தரவு இல்லாமல் ரசிக்க வைக்கிறது. தன் பின்னணியிசையால் ஒவ்வொரு காட்சிக்கு எனர்ஜி ஏற்றியிருக்கிறார் அனிருத். படம் முழுவதும் ரஜினிகாந்திற்கு இணையாக அனிருத்தும் ‘அலப்பறை’ செய்திருக்கிறார்.
மொத்த இந்தியாவுமே அலறும் ‘பேன் இந்தியன்’ ஆக்ஷன் அவதாரமாக இருக்கும் ரஜினிகாந்த் ஏன், சுமாரான ஒரு வில்லனுடன் நாள் கணக்காக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. வில்லன் வீடு வரை கேமரா வைத்து வாட்ச் செய்கிறவர், அதிரடி நடவடிக்கையாக எதுவுமே எடுக்காமல் வில்லன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஓடுவது ஏன் என்பதும் விளங்கவில்லை.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691665092_238_Jailer_7.jpg)
இந்தக் குறைகளை எல்லாம் ரஜினிகாந்த் தன் நடிப்பாலும் அனிருத் தன் இசையாலும் கூட்டணி போட்டு மறைக்க முயன்றிருக்கிறார்கள். மோகன் லால், சிவ ராஜ்குமார் ஆகியோருக்கு வைக்கப்பட்ட மாஸ் காட்சிகள் இரண்டாம் பாதிக்கு ப்ளெஸ்ஸாக மாறியிருக்கின்றன.
மொத்தத்தில் சோபிக்கத் தவறிய டார்க் காமெடி பார்முலாவை, ரஜினி பார்முலா கரை சேர்த்திருக்கிறது.