பஞ்சாப் மாநிலத்தில் கல்வி அமைச்சராக இருப்பவர் ஹர்ஜோத் சிங். இவர் ரோபர் மாவட்டம், தீர் என்ற கிராமத்தில் உள்ள கான்யா சீனியர் செகண்டரி பெண்கள் பள்ளிக்குத் திடீரென வருகை தந்தார். அமைச்சருடன் மாணவிகள் கலந்துரையாடினார்.
அப்போது மாணவிகளிடம் இருந்த குறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு தினமும் பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்தனர்.
உடனே தலைமை ஆசிரியரை அழைத்துப் பேசியபோது, அவர் மது குடித்திருப்பது தெரிய வந்தது. உடனே ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை அழைத்து இது குறித்து அமைச்சர் விசாரித்தார். தலைமை ஆசிரியர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாக மாணவிகள் தெரிவித்தனர்.
ஆனால் அப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு வருவது இல்லை என்று தெரிவித்தனர். இதனால் ஆசிரியர்களைக் கடுமையாகக் கண்டித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது குறித்து ஏன் புகார் செய்யவில்லை என்று கேட்டு கண்டித்தார். அதோடு தலைமை ஆசிரியர் மற்றும் அவருடன் இருந்த பெண் ஆசிரியர் ஆகியோர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தலைமை ஆசிரியரை பாதுகாக்க நினைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்ப அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் அப்பள்ளியின் மேம்பாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும் அமைச்சர் ஹர்ஜோத் அறிவித்தார். பள்ளி ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.