80களிலிருந்தே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டு பிரபலமாக இருந்து வருகிறது. ‘டர்ஃப்’ மைதானத்தின் வருகைக்குப் பிறகு கோவில்பட்டியிலிருந்து ஹாக்கி வீரர்கள் தேசியப் போட்டிகளில் தடம் பதித்திருக்கிறார்கள்.
தற்போது இந்திய ஹாக்கி அணியில் விளையாடிக் கொண்டிருக்கிற கார்த்திக் செல்வமும் கோவில்பட்டி விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்றவர்தான். தற்போது ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியை நேரில் காண்பதற்காக 500 கீ.மி தொலைவிலிருந்து பயணித்து சென்னையை அடைந்திருக்கிறார்கள், கோவில்பட்டி ஹாக்கி வீரர்களும் பயிற்சியாளர்களும். ஹாக்கி மீதுள்ள இந்த அளப்பரிய ஆர்வத்திற்கு காரணமிருக்கும் அல்லவா. அது குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள தூத்துக்குடி ஹாக்கி யூனிட்டின் செயலாளர் குருவிடம் பேசினோம்.
அவர்,”கோவில்பட்டியிலுள்ள அனைவருக்குமே ஹாக்கி விளையாட்டைப் பற்றி நன்றாகத் தெரியும். கடந்த 70 ஆண்டுகாலமாக தேசிய அளவிலான போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற்று வருகின்றன. கோவில்பட்டியில் இந்த அளவிற்கு ஹாக்கி விளையாட்டு முன்னேறியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த ஊரின் எந்தப் பகுதியில் போட்டி நடைபெற்றாலும் ஆர்வத்துடன் மக்கள் நேரில் சென்று பார்த்துவிடுவார்கள். ஒடிசாவில் நடைபெற்ற போட்டிக்கும் கோவில்பட்டியிலிருந்து பலர் நேரில் சென்று பார்த்தனர். இப்போது சென்னையில் நடைபெறுவதால் இன்னும் கூடுதலான மக்கள் வருகை தந்துள்ளனர். இந்த ஆசியக் கோப்பை போட்டியின் முதல் மூன்று நாட்களுக்கு பள்ளி மாணவர்கள் உட்பட பலர் சென்னைக்கு வந்து போட்டியைக் கண்டுகளித்தனர். பள்ளிகள் இயங்கி வருவதால் கோவில்பட்டிக்குப் பள்ளி மாணவர்கள் திரும்பிவிட்டனர். இப்போட்டியின் அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு கோவில்பட்டியைச் சேர்ந்த 40 சீனியர் வீரர்கள் சென்னை வருகிறார்கள்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Dr_C_GuruChitra_Shanmuga_Bharathu_Tuticorin__1_.jpg)
தமிழ்நாடு ஹாக்கி யூனிட்டின் தலைவர் ‘சேகர்.ஜே.மனோகரன்’ எங்களைப் போன்ற மாவட்ட செயலாளர்களிடம் ‘ஹாக்கி போட்டியை நேரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும் மாணவர்களை அழைத்துச் செல்லுங்கள்,அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாட்டையும் நாங்கள் செய்து தருகிறோம்’ எனக் கூறினார்கள். நானும் அடுத்ததாக மாவட்டங்களிலுள்ள கிளப்களில் பேசி மாணவர்களை அழைத்து வந்துள்ளேன். இப்போட்டியை காண்பதற்கு 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் பலரும் வந்திருந்தனர். சென்னையில் தங்குவதற்கான வசதிகளை அமைப்புகளிலிருந்து எங்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர். மாணவர்களுக்கு சேத்துபட்டிலுள்ள யுனிவர்சிட்டி யூனியன் மைதானத்தில் தங்குவதற்கு சலுகைகள் உள்ளன. மாணவர்கள் தங்குவதற்கு நாளொன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதை தவிர்த்து இதர உணவுச் செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சென்னை வருகிற பயணச் செலவுகளை எங்களைப் போன்ற சீனியர் வீரர்கள் ஸ்பான்சர் செய்தோம். தொலைவிலிருந்து பயணித்து வந்த மாணவர்கள் அனைவரும் கேலரியில் அமர்ந்து போட்டிகளை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
இப்போது இந்திய அணியில் ஆடிக்கொண்டிருக்கிற கார்த்திக் செல்வமும் கோவில்பட்டி விளையாட்டு விடுதியில் விளையாடியவர்தான். அதனாலேயே கோவில்பட்டியிலிருந்து பல வீரர்கள் உற்சாகத்துடன் பயணித்து வந்தனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு போட்டியையும் நேரில் பார்க்கும் போதுதான் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.
சர்வதேச போட்டிகளை நேரில் பார்க்கும் போது வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமையும். நானும் சென்னை பல்கலைகழகத்திற்காகவும், அண்ணாமலை பல்கலைகழகத்திற்காகவும் விளையாடியுள்ளேன். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் பால் பாய்ஸாக இருக்கிறார்கள்.கோடை காலங்களில் கோவில்பட்டியில் திருவிழா போன்று ஹாக்கிப் போட்டிகள் நடைபெறும். முன்பெல்லாம் போட்டி நடைபெறும் போது மாட்டு வண்டிகளில் வந்து பலர் போட்டியை ஆர்வத்துடன் காண்பார்கள். போட்டி சமயங்களில் நடுவர் ஏதேனும் தவறான முடிவெடுத்தால் உடனடியாக பார்வையாளர்கள் அந்தத் தவறை சுட்டிக் காட்டிவிடுவார்கள். அந்த அளவிற்கு கோவில்பட்டி மக்கள் ஹாக்கியுடன் ஒன்றிணைந்திருப்பார்கள். கோவில்பட்டியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஹாக்கி பற்றிய அனைத்து அப்டேட்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_05_at_12_13_06_AM.jpeg)
இந்திய அணியில் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிற கார்த்திக் செல்வத்தின் ஆட்டத்தை முன்பிருந்தே கவனித்து வருகிறேன். அவர் விளையாடிய முதல் சர்வதேசப் போட்டியிலேயே கோல் அடித்திருந்தார். முன்னணி ஹாக்கி வீரரான தன்ராஜ் பிள்ளையின் திறமை கார்த்திக் செல்வத்திடம் இருப்பது போல் தோன்றுகிறது. விளையாட்டில் அவனுடைய நுணுக்கமும்,வேகமும்தான் தனித்துவமாக இருக்கிறது. இப்போட்டியில் அவன் அடித்த முதல் கோலும் டாப் ஹிட்டில் அடித்திருந்தான்.” என்றவர் ஹாக்கி குறித்தான பல விஷயங்களை எடுத்துரைத்த பின்பு விடைபெற்றார்.