வெளியே வந்ததும் ராகுல் காந்தி சொன்ன வார்த்தை… பிரதமர் மோடி பேச்சும், பாரத மாதா சர்ச்சையும்!

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மவுனம் காத்து வந்ததால், அவரை பேச வைக்கும் முயற்சியாக இத்தகைய நடவடிக்கையை எடுத்தனர். கடந்த இரண்டு நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இந்நிலையில் இன்றைய தினம் பிரதமர் மோடி விளக்கம் அளித்து பேசினார்.

பிரதமர் மோடி பேச்சு

அப்போது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக
காங்கிரஸ்
, திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது காட்டமான கருத்துகளை முன்வைத்தார். 2 மணி நேரம் 12 நிமிடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் பேசி புதிய வரலாறு படைத்திருக்கிறார் பிரதமர் மோடி. கடைசியில் மணிப்பூர் விவகாரம் குறித்தும் பேசினார். நிச்சயம் அமைதி மீட்டெடுக்கப்படும் என்றும், கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்த அவலங்களை மறந்துவிடக் கூடாது என்று பழைய வரலாற்றை கிளறிவிட்டார்.

மணிப்பூரில் பாரத மாதா

தொடர்ந்து பேசுகையில், பாரதா மாதாவை கொலை செய்து விட்டதாக எதிர்க்கட்சிகள் எப்படி பேசலாம்? அவர்கள் தான் பாரதா மாதாவை மூன்று துண்டுகளாக வெட்டினர் என்று கடுமையாக பேசினார். முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, பாரதம் என்பது நம் நாட்டு மக்களின் உரிமைக் குரல். அந்த குரலை மணிப்பூரில் கொன்று விட்டீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்துவிட்டீர்கள். நீங்கள் தேசப் பற்றாளர்கள் இல்லை. துரோகிகள்.

ராகுல் காந்தி அதிரடி

பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை. ஏனெனில் மணிப்பூர் இந்தியாவின் ஒருபகுதியாக அவர் நினைக்கவில்லை. மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக பிளந்துவிட்டீர்கள் எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போதே ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் பலரும் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சிகளுக்கு சவால்

வெளியில் வந்ததும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாரதா மாதா என்ற வார்த்தை தற்போதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத வார்த்தையாக (Unparliamentary Words) மாறிவிட்டது என்று கூறிவிட்டு சென்றார். நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் மோடி பேசுகையில், நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முக்கியமான ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டினார். அதுவும் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார். 2018ல் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேலை கொடுத்தேன்.

மீண்டும் மோடி தான்

2023ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் என்று. என் வார்த்தையை அப்படியே பின்பற்றியுள்ளார்கள். ஆனால் ஒரு வருத்தம். கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் இன்னும் மேம்பட்டிருக்க வேண்டும். எதையும் புதிதாக யோசிக்கவில்லை. ஒரு திட்டமிடுதல் இல்லை. எந்த ஒரு அர்த்தமும் இல்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறேன். 2028ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள். அதற்காவது கொஞ்சம் விஷயத்துடன் வாருங்கள் என கிண்டலாக மோடி பேசியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.