Ola: S1 Pro அல்லது S1 Air எந்த ஓலா ஸ்கூட்டர் வாங்கலாம்? என்ன வித்தியாசம்?

டாப்–10 ஸ்கூட்டர் லிஸ்ட்டில் விற்பனை சார்ட்டில் எலெக்ட்ரிக்கல் ஏரியாவில், எல்லோருக்கும் ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது ஓலா. மாதத்துக்குத் தாராளமாக சுமார் 30,000 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து டாப்–10–ல் முதல் இடத்தில் இருப்பது ஓலாதான்.

இப்போது இன்னும் இறங்கியடிக்கக் காத்திருக்கிறது ஓலா. இந்த சுதந்திர தினத்தன்று 1 லட்ச ரூபாய்க்குள் ஒரு பேஸ் மாடல் S1 X எனும் ஸ்கூட்டரைக் களமிறக்க இருக்கிறது. இந்த நிலையில் லேட்டஸ்ட்டாக ஓலா S1 Air ஸ்கூட்டரும் இப்போது டெலிவரியைத் தொடங்க இருக்கிறார்கள். இதன் விலை ரூ.1.20 லட்சம் எக்ஸ் ஷோரூம். 

எலெக்ட்ரிக்கில் ‘எந்த கம்பெனி போகலாம்’ என்று சும்மாவே குழப்பியடிக்கும் நிலையில், இப்போது, ‘எந்த ஓலா வாங்கலாம்’ என்று வாடிக்கையாளர்கள் குழம்பத் தொடங்கிவிட்டார்கள். கரன்ட் ஆக விற்பனையில் இருக்கும் S1 Proவுக்கும், வரப் போகும் S1 Air ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம். 

S1 Pro-ல் 4kWh பேட்டரி;
S1 Air-ல் 3kWh பேட்டரி

இரண்டுக்கும் மிக முக்கியமான வித்தியாசம் விலை. S1 Pro–வின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.50 லட்சம் என்றால், S1 Air மாடலின் விலை ரூ.1.20 லட்சம். அதைத் தாண்டிப் பெரிய வித்தியாசம் என்றால், இதன் பேட்டரி பேக். ஓலா S1 Pro -வில் இருப்பது பெரிய 4kWh பேட்டரி என்றால், S1 Air மாடலில் இருப்பது 3kWh சக்தி கொண்டது. பேட்டரி அளவு சிறுசாகி இருப்பதால், சார்ஜிங் நேரமும் குறைகிறது. S1 Pro –வை சார்ஜ் செய்ய 6.30 மணி நேரம் ஆகும். இந்த ஏர் ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 5 மணி நேரம்தான் ஆகும் என்கிறது ஓலா. 

Air-ல் டிரம் பிரேக்ஸ்

ஓலாவின் S1 Pro –வை லாங் ஷாட்டிலேயே கண்டுபிடித்து விடலாம். இதில் முன் பக்கமும் சரி; பின் பக்கமும் சரி – மோனோ ஷாக் சிங்கிள் ஃபோர்க் இருந்தால், அது S1 Pro. இது யூனிக்காக இருக்கும். இதுவே ஏர் மாடலில், நார்மல் ஸ்கூட்டர்களில் இருப்பதுபோல் பாரம்பரியமான டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் டூயல் ஷாக் அப்ஸார்பர்களும், பின் பக்கமும் ட்வின் ஷாக் சஸ்பென்ஷன் செட்அப்பும் இருக்கும். மோனோ ஷாக்கின் ரைடு குவாலிட்டி நச் என்று இருக்கும். ஆனால், வீல்கள் அதே 12 இன்ச் வீல்கள்தான். S1 Pro ப்ரோவில் அலாய் வீல்கள் இருந்தால், இந்த S1 Air மாடலில் சாதா ஸ்டீல் வீல்கள்தான். அதேபோல், டூயல் டிஸ்க் ஆப்ஷன், ப்ரோ மாடலில் இருக்கும். ஏர் மாடலில் சாதாரண டிரம் பிரேக்ஸ்தான். எனவே, பிரேக்கிங்கிலும் வித்தியாசம் இருக்கும். இதன் காரணமாக S1 Pro–வை விட ஏகப்பட்ட எடை மாற்றம் தெரிகிறது S1 Air–ல். ஆம், சுமார் 13 கிலோ எடை குறைந்திருக்கிறது. S1 Pro–வின் எடை 121 கிலோ. இதுவே S1 Air மாடலின் எடை 108 கிலோ. இது ஹோண்டா ஆக்டிவாவைவிட 3 கிலோ அதிகம். அதனால், ஹேண்ட்லிங் ஈஸி பாஸ்!

அதே 12 இன்ச் வீல்கள்தான்; S1 Air-ல் டிரம் பிரேக்ஸ்தான்.

S1 Pro–வின் ஃபேவரைட்டே அதன் மிட் மவுன்ட் மோட்டார் எனும் தொழில்நுட்பம்தான். இது பெர்ஃபாமன்ஸுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதை Mid-Drive மோட்டார் என்றும் சொல்வார்கள். ஒரு வாகனத்தின் சென்டர் ஆஃப் கிராவிட்டி பார்த்து, சென்டர் பார்த்து இதை ஃபிட் செய்வார்கள். இது சட்டென ரியர் வீல்களுக்குப் பவரைக் கடத்தி, ஸ்கூட்டர் வர்ர்ரூம் எனக் கிளம்ப உதவும். 

இதுவே சிங்கிள் ஹப் மோட்டார் (Hub Motor) என்பது ஸ்கூட்டரின் பின் பக்க வீலுக்கு நடுவே ஃபிட் செய்திருப்பார்கள். இதுதான் நமது பாரம்பரியமான மோட்டார். இது குறைந்த பராமரிப்புக்குப் பெயர் போன மோட்டார். ஓலாவின் மிட் மவுன்ட் மோட்டாருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், இந்த ஹப் மோட்டார் எடுபடுமா என்று பார்க்க வேண்டும்.

S1 Pro-வில் ரியர் டிஸ்க்
LED Head light

அதேபோல், S1 Pro–வின் பீக் அவுட்புட் பவர் 8.5kW. அதாவது, சுமார் 11.3bhp கிடைக்கும். இதுவே S1 Air–ன் அவுட்புட் கிட்டத்தட்டப் பாதியாகக் குறைகிறது. 4.5 kW பவர்தான். இது சுமார் 6.03bhp பவர்தான் கொடுக்கும். அதனால், ஓலாவின் S1 Pro–வை ஓட்டிவிட்டு இதை ஓட்டினால், ஓட்டுதல் கொஞ்சம் ‘டொய்ங்‘ என்றே இருக்கலாம். அட, ஆனால், S1 Air–ன் டாப் ஸ்பீடு 90 கிமீ பறக்கலாம் என்று சொல்கிறது ஓலா. இது ஏத்தர் 450X மாடலின் டாப் ஸ்பீடாச்சே!

ஓட்டுதலைப் பொருத்தவரை மோடுகளில் Hyper என்கிற மோடு, S1 Air–ல் மிஸ் ஆகிறது. மற்றபடி எலெக்ட்ரானிக் அம்சங்கள் எல்லாம் S1 Pro–வில் இருப்பவைதான். 34 லிட்டர் ப்ரோவில் இருந்த அண்டர் சீட் இடவசதி, S1 Air–ல் 32 லிட்டராகக் குறைகிறது. டிசைன் அதேதான்; ஆனால், கறுப்பு பிளாஸ்டிக் பாகங்களை நிறைய S1 Air–ல் பார்க்கலாம். ப்ரோவில் ஸ்ப்ளிட் கிராப் ஹேண்டில் இருக்கும்தானே… இதில் சிங்கிள் பீஸ் ட்யூபுலர் கிராப் ஹேண்டில் இருக்கும். இதன் ஃப்ளாட்டான ஃப்ளோர் போர்டும் மாறுகிறது. S1 Pro– வை நீங்கள் நன்கு கவனித்தால் தெரியும்; அதில் வாழைப்பழ வடிவ ஃப்ளோர் போர்டு இருக்கும். இதை நிறைய பேர் ரசித்திருந்தார்கள். ஓலா S1 Air–யை எப்படி ரசிக்கிறார்கள் என்று பார்க்கலாம்! மற்றபடி இந்த 2 ஸ்கூட்டர்களுமே ஒரே 7 இன்ச் ஃபுல் TFT டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளேதான் இருக்கிறது. ரிசொல்யூஷன் மட்டும் வேறுபடும். S1 Pro–வில் 1280 x 768 Pixel கள் இருந்தால், S1 Air–ல் 800 x 480 Pixelகள் இருக்கின்றன. 

Air ஸ்கூட்டரில் வாழைப்பழ வடிவில் ஃப்ளாட்டான ஃப்ளோர் போர்டு மிஸ்ஸிங்!

மற்றபடி விலையைப் பொருத்தவரை – இந்த ஆகஸ்ட் 15 வரை புக் செய்பவர்களுக்கு மட்டும் 10,000 ரூபாய் விலைத் தள்ளுபடி உண்டாம். அதன் பிறகு புக்கிங் செய்பவர்களுக்கு 1.20 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலை. இந்த விலை என்பது ஓகேதான் என்றே தோன்றுகிறது. இது டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஏத்தர் 450X போன்ற ஸ்கூட்டர்களை விட விலை மலிவாகவே இருக்கிறது. 

என்ன பாஸ், ஓலா S1 Pro வாங்கலாமா… S1 Air வாங்கலாமானு ஒரு முடிவுக்கு வர முடியுதா? ஓலா பற்றி உங்களுக்குக் கருத்து இருந்தால் சொல்லுங்கேளன்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.