அமைச்சர் செந்தில் பாலாஜியை, பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைதுசெய்த விவகாரத்தில், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் அமலாக்கத்துறைக்குச் சாதகமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, இதய அறுவை சிகிச்சை முடிந்து உடல்நல தேறிவந்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_07_at_17_21_57.jpeg)
அதையடுத்து, செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றமும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. அதன்படி, செந்தில் பாலாஜியின் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, கடந்த ஐந்து நாள்களாக செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரித்து வந்தது அமலாக்கத்துறை.
இந்த நிலையில், விசாரணை முடிவடைந்ததையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை தொடர்பான 3,000 பக்க ஆவணங்களை இரும்புப்பெட்டியில் வைத்து, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல்செய்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_12_at_3_29_16_PM.jpeg)
இந்தக் குற்றப்பத்திரிகையில், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வாய்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், மீண்டும் விசாரனைக் காவல் எதுவும் கேட்கப்படவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னொருபக்கம், ஆகஸ்ட் 16-ம் தேதிக்குப் பிறகு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.