செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்.. அமலாக்கத்துறை சொன்ன முக்கிய விஷயம்

சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து 5 நாட்கள் விசாரித்தனர். அவரது காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சுமார் 3000 முதல் 4000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

அதில் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதற்கான முகாந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பட்டியலிடப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, செந்தில் பாலாஜியிடம் நீதிபதி விசாரணை நடத்திய போது, “காவலில் தன்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தவில்லை” என அவர் கூறினார். இதையடுத்து, அவருக்கு வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்பேரில் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்பத்திரிகையும் ஜாமீனும்:
இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் விரைவில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத வரை, குற்றம்சாட்டவருக்கு ஜாமீன் கிடைப்பது கடினம். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஜாமீன் எளிதாக கிடைத்துவிடும்.

விறுவிறு ஏற்பாடு:
அந்த வகையில், தற்போது தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அவரை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வார்கள். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 25-ம் தேதி முடிவடையவுள்ளதால், ஆகஸ்ட் 26-ம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது எளிதான விஷயம் அல்ல என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்:
காவல்துறையால் கைது செய்யப்படும் நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது, அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிது. ஆனால், அமலாக்கத்துறையின் கதையே வேறு என்கின்றனர் சட்ட வல்லுநர்கல். ஒரு புகார் வந்தாலே காவல்துறையால் வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால், அமலாக்கத்துறை அப்படி அல்ல. எந்த வழக்காக இருந்தாலும் குற்ற முகாந்திரம் இருந்தால் மட்டுமே அவர்கள் வழக்கு பதிவு செய்வார்கள். அதாவது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்கிறது என்றாலே அங்கு குற்றம் நடந்திருப்பது உறுதியாகியுள்ளதாகவே அர்த்தமாம்.

“எளிதாக கிடைக்காது”:
எனவே அமலாக்கத்துறை தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் மிகவும் கவனமாக அணுகும் எனக் கூறப்படுகிறது. ஜாமீன் மனு மீதான விசாரணையில், அமலாக்கத்துறையின் வாதத்தை நீதிமன்றம் அதிகமாக கவனத்தில் கொள்ளும். அமலாக்கத்துறை வழக்குகளில் பல அரசியல் தலைவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதுதான் அதிகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மருத்துவ ரீதியான காரணமாக இருந்தால் மட்டுமே.. அதுவும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கும். எனவே செந்தில் பாலாஜிக்கு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடாது என சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.