இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், முதலில் நடிகராகத் திரையுலகுக்குள் வந்தார். 1999-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான `தாஜ்மஹால்’ படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அவற்றில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. எனவே கதாநாயகனாகத் தொடர இயலவில்லை.
அதனால் சோர்ந்து போகாமல் வெளிநாடு சென்று இயக்குநர் பயிற்சி குறித்துப் படித்துவிட்டு வந்தார். இப்போது தன் படிப்புக்கேற்ற வேலையைத் தொடங்கிவிட்டார். புதுமுக நாயகன், நாயகி நடிப்பில் அவர் இயக்கியிருக்கும் படம் ‘மார்கழித் திங்கள்’. காதலை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் பாரதிராஜாவும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் இயக்குநர் சுசீந்திரன். தயாரித்ததோடு நில்லாமல் அவர் நடிகராகவும் களமிறங்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. படப்பிடிப்புத் தளத்தில் பாரதிராஜா, சுசீந்திரன் ஆகிய இரண்டு இயக்குநர்களை இயக்கி அவர்களிடம் நற்பெயர் பெற்றிருக்கிறார் மனோஜ் பாரதிராஜா.
இந்தப் படத்துக்கு முதலில் வேறொரு இசையமைப்பாளரை வைத்து இசையமைக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால், படத்தில் ஓர் அழகான கிராமத்துக் காதல் இருக்கிறது. கிராமம், காதல் என்றால் பாடலுக்கும் இசைக்கும் இளையராஜாதான் சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் மனோஜ். எனவே, அப்பாவின் பால்ய நண்பரும், அவருடைய முதல்பட இசையமைப்பாளருமான இளையராஜாவையே தன்னுடைய முதல் படத்துக்கு இசையமைக்க வைக்க வேண்டுமென அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
அவருடைய விருப்பத்தைத் தயாரிப்பாளர் சுசீந்திரனும் வழிமொழிந்த நேரத்தில் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் இருந்திருக்கிறார் இளையராஜா. அவர் வந்தபின்பு அவரையே ஒப்பந்தம் செய்யவேண்டுமெனக் காத்திருந்தனர். ஜூலை 24-ம் நாள் அமெரிக்காவில் பிரமாண்ட இசைக்கச்சேரியை முடித்துவிட்டு அதற்கடுத்த நாள் சென்னை திரும்பிய இளையராஜாவை உடனடியாகச் சந்தித்தனர். இந்தப் படத்துக்கு இசையமைக்கவேண்டும் என்றதும் அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாராம்.
அதன்பின் கதை மற்றும் பாடல்களுக்கான சூழல்கள் கேட்டு அதிலும் நிறைவடைந்த இளையராஜா, மனோஜ் பாரதிராஜாவை உச்சிமோந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார். இளையராஜா – பாரதிராஜா கூட்டணியில் உருவான பாடல்கள் இன்றும் இசையுலகை ஆண்டுகொண்டிருக்கின்றன. அவற்றிற்கு இணையான அழகிய பாடல்களை ‘மார்கழித் திங்களில்’ எதிர்பார்க்கலாம் என்று நம்பிக்கையோடு படக்குழுவினர் காத்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை தலைமுறைகளைக் கடந்தது. அவர் பணியும் தலைமுறை கடந்திருக்கிறது.