ரேசன் கார்டு போதும்.. அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை.. மகாராஷ்டிரா அரசு அதிரடி!

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி மகாராஷ்டிரா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் இருது எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

இதுதொடர்பாக பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் தானாஜி சாவந்த், “அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். அதற்கான செலவுகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும்” என்று தெரிவித்தார்.

மருத்துவ உரிமைகள் பிரிவின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற மருத்துவமனைகள், பெண்கள் மருத்துவமனை, மாவட்ட பொது மருத்துவமனைகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள் இந்த பட்டியலின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நாசிக் மற்றும் அமராவதியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை வழங்கப்படும்.

2,418 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் இந்த பட்டியலில் உள்ளன. இதன் மூலம் 2.5 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தில் பயன்பெற ரேசன் கார்டு மற்றும் இருப்பிட சான்றிதழை மக்கள் வழங்க வேண்டும். ஆனாலும், மருத்துவ கல்வி துறையின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரி மருத்துமனைகளுக்கு இலவச சிகிச்சை திட்டம் பொருந்தாது.

2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தபோது இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது மகாராஷ்டிரா அரசு. மகாத்மா ஜோதிபா பூலே ஜன் ஆரோக்கிய யோஜனா (MJPJAY)என்ற பெயரிலான இந்த இன்ஸூரன்ஸ் திட்டம் மக்களுக்கு பாதுகாப்பாக அரணாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.