குறைந்த விலை இண்டர்நெட்… கேரளா கே போன் மாதிரி தமிழகத்தில் டி.என் போன் திட்டம் வருகிறது!

கேரள மாநிலத்தில் கே ஃபோன் என்ற திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி தொடங்கிவைத்தார். கேரளா பைபர் ஆப்டிக்கல் நெட்வொர்க் என்பதன் சுருக்கமாக கே போன் என இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கேரள மின்சார வாரியம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இணையம் அடிப்படை உரிமை என்பதை மையமாகக்கொண்டு இந்த திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக இணைய வசதி ஏற்படுத்தப்படும். மற்றவர்களுக்கு நியாயமான விலையில் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.

கே போன் திட்டம்

அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களிலும் இந்த இணைய இணைப்பு வழங்கப்படும். குறைந்த செலவில் அதிவேக இண்டர்நெட் என்ற தாரக மந்திரத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நகரத்தைப் போன்று கிராமங்களுக்கும் அதிவேக இணைய சேவை வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். முதற்கட்டமாக 14,000 வீடுகளுக்கும், 30,000 அரசு அலுவலகங்களிலும் இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

1,532 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொச்சியைத் தலைமையிடமாக்கொண்டு கே போன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இண்டர்நெட்!

ஒவ்வொரு மின்சார வாரிய சப் ஸ்டேஷன்கள் கே போன் திட்ட மையங்களாக செயல்படும். ஒரு எம்.பி.பி.எஸ் முதல் ஒரு ஜி.பி.பி.எஸ் வரை இணையத்தின் வேகம் இருக்கும். 299 ரூபாய் முதல் 1,249 ரூபாய் வரையிலான 9 பிளான்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

299 ரூபாய்க்கு 20 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 3000 ஜி.பி டேட்டா வழங்கப்படும். ரூ.1,249 திட்டத்தில் 5000 ஜி.பி டேட்டா 250 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்கப்படும். அனைத்து திட்டங்களுக்கும் ஆறு மாதம் காலாவதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சியடையவும் வாய்ப்பு உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்று குறைந்த விலையில் இண்டர்நெட் சேவை வழங்க தமிழக அரசும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கே போன் திட்டம் குறித்து அறிந்துகொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திருவனந்தபுரம் சென்றிருந்தார். உடன், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றிருந்தனர்.

கே போன் திட்டம் குறித்து அறிந்துகொள்ள சென்ற தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கே போன் திட்டம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கிக் கூறினார். இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “கே போன் பற்றித் தெரிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேரளாவுக்கு வந்திருந்தார். அவரை நேரில் சந்தித்து கே போன் குறித்தும் விரிவாக பேசினேன். கே போன் திட்டத்தை முன்மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு பைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்ற பெயரில் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தை செயல்படுத்த அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்குவதாக தெரிவித்தேன். மக்கள் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் நேர்மையான ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து முன்னேறுவோம் என பரஸ்பரம் உறுதி அளித்தோம்” என்றார்.

குறைந்த செலவில் இணைய வசதி கிடைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இந்த வசதியை சரியாக பயன்படுத்த வேண்டியது மக்களின் பொறுப்பு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.