பாபர் அசாம் குறித்து விராட் கோலி கருத்து… கிரிக்கெட் உலகில் பரபரப்பு!

Virat Kohli Babar Azam: வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு முன்பு பாபர் அசாம் குறித்து விராட் கோலி பேசி கருத்துகள் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த இரண்டு வீரர்களும் தற்கால சிறந்த பேட்டர்கள் என்பதைு அனைவரும் அறிவார்கள். வரும் ஆசிய கோப்பை தொடரில், இந்த இரண்டு வீரர்களும் நேருக்கு நேர் மோத உள்ளனர். பாகிஸ்தான் கேப்டனான பாபர் ஆசாம் உடன் நடந்த தனது முதல் சந்திப்பு குறித்த கதையை விராட் கோலி தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி, ‘பாபர் அசாம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்’ என வர்ணித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான ஒரு உரையாடலில், விராட் கோலி பாபர் ஆசாமுடனான தனது முதல் சந்திப்பை நினைவு கூர்ந்தார். மேலும் அவரது பேட்டிங்கைப் பாராட்டினார். 

அதில், அவர் “2019 ஒருநாள் உலகக் கோப்பையின் போது மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்திற்குப் பிறகு பாபருடனான எனது முதல் உரையாடல் நடந்தது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இருந்தே இமாத் வாசிமை எனக்குத் தெரியும், மேலும் அப்போது அவர் வந்து பாபர் உங்களிடம் பேச விரும்புகிறார் என்று கூறினார். 

நாங்கள் அமர்ந்து ஆட்டத்தைப் பற்றி பேசினோம். முதல் நாளில் இருந்தே என் மீது அவரிடம் இருந்த மிகுந்த மரியாதையையும மதிப்பையும் நான் கண்டேன். இதில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. பாபர் அசாம் அனைத்து வடிவங்களிலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஒரு நிலையான ஆட்டக்காரர், அவர் விளையாடுவதை நான் எப்போதும் ரசிப்பேன்” என்று கூறினார்.

பாபர் தற்போது 886 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆடவர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அதே நேரத்தில், கோஹ்லி 705 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். பாபர் அசாம் டி20 மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளார், இது அனைத்து வடிவ சூப்பர் ஸ்டாராக அவரது நிலையை உறுதிப்படுத்துகிறது. தற்போது, தரவரிசைப் பட்டியலில் அனைத்து வடிவங்களிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே வீரர் இவர்தான்.

ஆசிய கோப்பையின் குரூப் ஸ்டேஜில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டம்பர் 2ம் தேதி இலங்கையின் கண்டியில் மோதுகின்றன. முதல் சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடித்தால், அவர்கள் சூப்பர் 4 நிலையிலும் போட்டியிடலாம். இது தவிர, அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் உள்ளது. டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், டி20 தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ள நிலையில், இன்று வெற்றி பெறுபவர்கள் தொடரை கைப்பற்றுவார்கள். மேலும், இதை அடுத்து இந்திய அணி, அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

அங்கு இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. மேலும், அத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பங்கேற்கவில்லை. அதன்பின், ஆசிய தொடரில் விளையாடும் இந்திய அணி, அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. அதன்பின், அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.