மும்பை அருகில் தானே கல்வாவில் சத்ரபதி சிவாஜி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை டாக்டர்களின் கவனக்குறைவால் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். இதனால் உள்ளூர் எம்.எல்.ஏ ஜிதேந்திர அவாத் நேரில் சென்று பார்வையிட்டு டாக்டர்களை கண்டித்தார். தற்போது நேற்று இரவில் மேலும் 17 நோயாளிகள் டாக்டர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துவிட்டனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 14 பேரும், பொது வார்டில் சேர்க்கப்பட்டிருந்த 3 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Screenshot_2023_08_13_163937.png)
அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். எங்கும் அழுகை சத்தமாகவே இருந்தது. டாக்டர்கள் சிகிச்சையளிக்கவும் வரவில்லை, மருந்தும் கொடுப்பதில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏற்கெனவே போதிய படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவுகள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் முதல்வர் ஷிண்டேயிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தானே முதல்வர் ஷிண்டேயின் சொந்த ஊராகும். உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதுமாக இருக்கின்றனர். இந்தச்ஜ் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், “சரியான நேரத்தில் மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க தவறியது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/92913405.webp.jpeg)
“ஒரே நேரத்தில் 17 நோயாளிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கும் துரதிஷ்டவசமான சம்பவமாகும். 5 நோயாளிகள் உயிரிழந்தபோதே மாவட்ட நிர்வாகம் சுதாரித்துக்கொண்டு தேவையான நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி இருக்கலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சரத் பவார் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சொந்த ஊரில் உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மூன்று நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, தனது கிராமத்திற்கு சென்றுவிட்டார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.