ஆங்கிலத்தில் பேசிய தொகுப்பாளரை திட்டிய பிக்பாஸ் அசீம் – என்ன சொன்னார் தெரியுமா?

Biggboss Fame Azeem: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விண்டோ எண்டர்டெயின்மெண்ட்ஸ் நடத்தும் தென்னிந்தியாவின் பிரீமியம் அழகுப் போட்டிக்கான லோகோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.எல். விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அதன் லோகோவை வெளியிட்டார். இந்நிகழ்வில் பிக்பாஸ் புகழ் ஆசிம், ‘ஸ்டைலிஸ் தமிழச்சி’ பாடல் புகழ் அக்ஸ்ரா கவுடா ஆகியோர் உடன் இருந்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் பிரபலம் ஆசிம் இந்த நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர், “ஆங்கர் (தொகுப்பாளர்) ஐதராபாத்தில் இருக்கிறன்னு நெனச்சிட்டாங்கப்  போல… இது தமிழ் மீடியா சேனல், நீ  பேசுறது (ஆங்கிலம்) எதுவுமே வராதுமா” என்றார். அதற்கு அந்த தொகுப்பாளர்,”ஆங்கிலம் ஒரு standard lanuague என்பதாலும், அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவும் அதில் பேசினேன்” என ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்.  

தொடர்ந்து, கோபமடைந்த அசீம், “அப்போ தமிழ் மொழி standard இல்லையா” என திருப்பிக் கேட்டார். மேலும், தொடர்ந்த அவர், “அப்படி என்றால் இந்த நிகழ்ச்சியை நீங்கள் லண்டனில் தான் வைத்திருக்க வேண்டும். அடுத்த முறையாவது சென்னையில் நடக்கின்ற நிகழ்ச்சியில் தமிழில் பேச கற்றுக்கொள்ளுங்கள்” என கோபமாக பேசினார். 

இதை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் மற்ற பிரபலங்களும் பேச தொடங்கினர். ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கையோடு பேசிய நடிகை அக்க்ஷரா கவுடா, “தமிழ்ல தப்பா பேசினா என்ன மன்னிச்சிடுங்க” என சொல்லிவிட்டு பேச தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மிஸஸ் இந்தியா அழகி நந்தினி நாகராஜன், “நான் பெங்களூரில் இருந்து வருகிறேன். ஆனா எனக்கு தமிழ் நல்லா வரும். நான் தமிழிலேயே பேசறேன்” என்று சொல்லி பேசினார். மிஸஸ் இந்தியா அழகி ஒருவரும், “நானும் தமிழ் தான்… நான் சேலத்தல தான் பிறந்தேன்” என பேச தொடங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் பெண் தொகுப்பாளரிடம், பிக்பாஸ் பிரபலம் சமாதான கொடியை பறக்கவிட்டார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 6ஆவது சீசன் கடந்த ஜனவரி மாதம் நிறைவுபெற்றது. இந்த பிக்பாஸ் 6ஆவது சீசனில் தமிழ் சீரியல் நடிகர் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே அசீம் மீது பல்வேறு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அவரை வெற்றியாளராக அறிவித்தது பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. 

இரண்டாவது இடத்தை பிடித்த விக்ரமனுக்கும் பிக்பாஸ் வீட்டிலும், வீட்டிற்கு வெளியேவும் பல்வேறு சச்சரவுகள் நடந்தன. சமீபத்தில், விக்ரமன் மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அப்போது, அசீம் விக்ரமனின் பெயரை குறிப்பிடாமல் ட்வி்டரில்,”நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும் (என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும்)” என குறிப்பிட்டிருந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. 

இது ஒருபுறம் இருக்க, அசீம் அடுத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை எடுத்த பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.