தென்காசி மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலையில் ரயில் மூலம் தென்காசி வந்தார். பின்னர் தனது வழக்கமான நடைப்பயணத்தை மேற்கொண்டார். தென்காசியில் இருந்து மேலகரம், இலஞ்சி, திருமலைக்கோவில் சாலை வழியாக அவர் 8 கி.மீ தூரம் நடந்தார்
பின்னர் தென்காசி மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு, ஹோமியோபதி சிகிச்சை பிரிவு ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் முறையை அமல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹெல்த் வாக் முறையின்படி 8 கி.மீ தூரத்துக்கு நடைப்பயணம் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு, அதன் இருபுறங்களிலும் மரங்கள் நடவு செய்யப்பட்டு இருக்கைகள் அமைக்கப்படும். அதோடு, அந்தப் பகுதியில் நடைப்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளும் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டத்தை விரைவில் முதல்வர் தொடங்கி வைப்பார்.
இந்தத் திட்டத்தின்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் மாதந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு உடல்நலப் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வார்கள். இந்த மாவட்டத்தின் ‘ஹெல்த் வாக்’ சாலைக்கான இடத்தை ஆட்சியருடன் சென்று ஆய்வு செய்துள்ளேன். விரைவில் அந்த சாலை பயன்பாட்டுக்கு வரும்.
நீட் விலக்கு பெற வேண்டும் என்பதில் முதல்வர் தீவிரமாக உள்ளார். அதற்காக நீட் தேர்வு விலக்கு மசோதா தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதுடன் திருப்பி அனுப்பினார். அதனால் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதால் வேறு வழியின்றி ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். அங்கிருந்து தமிழக சுகாதாரத்துறை, ஆயூஷ், கல்வித்துறைக்கு சில விளக்கங்கள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ளோம். அதனால் அந்த மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனி எந்த தொடர்பும் கிடையாது. அவர் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட வேண்டிய அவசியமே கிடையாது. அதனால் அவர் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று பேசியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.