செந்தில் பாலாஜி தம்பி எங்கே இருக்கிறார்? கையை விரித்த அமலாக்கத்துறை – இது என்ன புது ட்விஸ்ட்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து இன்றோடு மூன்று மாதங்கள் முழுதாக முடிந்தன. இந்த மூன்று மாதங்களாக அமலாக்கத்துறைக்கு போக்கு காட்டி வருகிறார் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார். நேற்று அவர் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அமலாக்கத்துறை இன்று அதை மறுத்துள்ளது.

செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அடுத்தடுத்து சோதனைகளை நடத்தியதில் செந்தில் பாலாஜியின் வலது கையாக செயலபட்டு வந்தது அவரது தம்பி அசோக் குமார் என்பது தெரிய வந்தது.

திரைமறைவில் செந்தில் பாலாஜியின் நிழலாக கோலோச்சி வந்துள்ளார் அசோக் குமார். பல்வேறு கட்ட சோதனைகளில் இது அசோக் குமார் தொடர்பான ஆவணங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரை விசாரித்தால் பல உண்மைகள் தெரிய வரும் என்பதால் அசோக் குமாருக்கு தொடர்ச்சியாக சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்தன.

ஜூன் 16, 21, 29, ஜூலை 15 என நான்கு முறை சம்மன் அனுப்பியும் அவர் அமலாக்கத்துறை முன்னர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல் நலமில்லை, ஆவணங்களை தயார் செய்து வருகிறேன் என்று பல்வேறு காரணங்கள் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே ஆகஸ்ட் 7 முதல் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப் பத்திரிக்கையில் செந்தில் பாலாஜி பெயரை தவிர வேறு யாருடைய பெயரும் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ரெய்டு!

இந்த சூழலில் நேற்று கொச்சியில் பதுங்கியிருந்த அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல் வெளியாகியது. அவரை கைது செய்து தமிழ்நாடு அழைத்து வருவார்களா அல்லது டெல்லி அழைத்துச் செல்வார்களா என்ற கேள்வி எழுந்தது. சென்னை அழைத்து வரப்படுவார் என்றே தகவல்கள் வந்தன. ஆனால் அதன் பின்னர் அசோக் குமார் குறித்த தகவல் இல்லை.

அவரை எங்கே வைத்து அமலாக்கத்துறை விசாரிக்கிறது என்பது குறித்து செய்திகள் வெளியாகாத நிலையில் இன்று அமலாக்கத்துறை தரப்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாரை கைது செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் குமாரை கைது செய்யவில்லை என்றால் எப்படி அவ்வாறான தகவல் பரவியது. நேற்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது என்று கூறப்பட்ட நிலையில் உடனடியாக மறுக்காமல் ஒரு நாள் கழித்து அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வரும் போதும் முன்னாள் அமைச்சர் என்றே அமலாக்கத்துறை அவரை குறிப்பிட்டு வருவதும் விவாதத்துக்குள்ளாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.