“என்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை”; வளர்ச்சிகண்டது இந்தியா; சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்| PM Narendra Modi says, When we came to power in 2014, we were at the 10th position in the global economic system.

புதுடில்லி: மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்தனர். இந்த நம்பிக்கை வீண்போகாத அளவிற்கு இந்தியாவை முன்னேற்றி உள்ளேன் என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த ஊழல் என்பதை அகற்றி எனது அரசும், அமைச்சகமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இன்றைய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது: 140 கோடி பேர் கொண்ட எனது இந்திய மக்கள் குடும்பத்தினருக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள். அயல்நாட்டவர்கள் வளம் கொண்ட நமது இந்தியாவுக்குள் புகுந்து கைப்பற்றி கொள்ளை அடித்தனர். பலர் செய்த தியாகங்களின் அடிப்படையில் இந்த சுதந்திரம் கிட்டியுள்ளது. அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.. வளர்ச்சிக்கான இந்தியா என்ற கனவில் இந்தியா முன்னோக்கி வருகிறது. தேசம்தான் நமக்கு முதல் முக்கியம். 75 வது குடியரசு தினத்தை நாம் அடுத்த ஆண்டில் கொண்டாட உள்ளோம். மணிப்பூரில் நடந்த துரதிருஷ்டமான சம்பவங்கள் கவலை அளிக்கிறது. தற்போது மணிப்பூர் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய , மாநில அரசு முழு முயற்சியுடன் விரைவில் முழு அமைதி ஏற்படும்.

இந்தியாவின் பலம் இதுவே

உலகத்திற்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. உலகிற்கு நம்பிக்கை விதையை விதைத்துள்ளது. தற்போது நாம் எடுத்து வரும் நடவடிக்கை முன்னேற்ற தாக்கம் வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் இருக்கும். தற்போதைய பாதையில் தடுமாற்றமோ, பாதை விலகலோ இல்லை. அனைத்து ஜனநாயகத்திற்கும் இந்தியா தான் தாய். வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகம், மக்கள் தொகை இதுவே இந்தியாவின் பலம் , இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. இளைஞர்களே இந்தியாவை முன்னோக்கி அழைத்து செல்லும் சக்தி கொண்டவர்கள். இஸ்ரோ முதல் ஜி.20 வரை பெண்கள் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உருவாகி உள்ளது. இந்திய நவீனத்தை நோக்கி செல்கிறது. கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு உலக அளவில் கொண்டு செல்லப்பட்டனர். இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நன்றி. தேசமே முதல், முக்கியம் என்ற நோக்கில் இந்தியாவை கட்டமைப்பதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

இந்தியா உலகில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கோவிட் பாதிப்பிற்கு பின் இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கிறது. 200 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி போட்டு சாதனை படைத்தோம். இந்தியா உலகை வழிநடத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது. செயல்பாடு, மாற்றங்கள், சீர்திருத்தங்கள் என்பதை மந்திரமாக கொண்டு இந்தியாவை உருவாக்கி வருகிறோம். இது தொடர நிலையான அரசு தேவைப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கு ஒன் ரேங் ஒன் பென்ஷன் திட்டம் கொண்டு வந்தோம். முத்ரா யோஜனா மூலம் வேலை வாய்ப்பை பெருக்கினோம்.

2014 ல் நிலையான அரசுக்கு மக்கள் ஓட்டளித்துள்ளனர். என்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை, இந்தியாவை முன்னேற்றி உள்ளோம். 2014 ல் இந்தியா பொருளாதாரத்தில் 10 வது இடத்தில் இருந்தது. தற்போது இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஒவ்வொரு அமைச்சகமும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அறிவிப்போடு நிற்காமல் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம். நிலவுக்கு சந்திரயான் 3 அனுப்பி இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.

குறைந்த விலையில் உரம்

பணவீக்கத்தை கட்டுப்படுத்தினோம். இந்தியா வரும் காலங்களில் பொருளாதாரத்தில் 3 வது நாடாக இருக்கும். புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் 12.5 லட்சம் பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். வந்தே பாரத் ரயில் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்க வழி செய்துள்ளோம். 18 ஆயிரம் கோடி கிராமங்கள் மின்வசதி பெற்றுள்ளது. கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழைகள் பயன்பெற்றுள்ளனர். பாரம்பரிய திறன் கொண்டவர்களை ஊக்குவிக்க விஸ்வகர்மா திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. எங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நாங்கள் ஓய மாட்டோம். இந்தியாவின் வளர்ச்சிக்கு உழைக்க இந்நாளில் மக்களின் ஆசியை வேண்டுகிறேன் .

குண்டுவெடிப்புகள் ஏதும் இல்லை

ஊழல் நமது நாட்டின் வளர்ச்சியை பெரும் அளவில் பாதிக்கிறது. ஊழல்களால் சூழப்பட்ட இந்தியா தற்போது மாறியுள்ளது. பாதுகாப்பு படையினரின் சீரிய பணியால் நாட்டில் குண்டுவெடிப்புகள் ஏதும் இல்லை. எல்லை பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. 2047 ல் வளர்ந்த இந்தியாவாக உருவெடுக்க தொடர்ந்து ஓய்வின்றி உழைத்து வருகிறோம். ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த், பாரத்மாதாக்கி ஜே! என உரையை முடித்தார் பிரதமர் மோடி .

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.