பெங்களூரு மெட்ரோ என்றாலே ’நம்ம மெட்ரோ’ என்ற பெயர் தான் உள்ளூர்வாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வரும். தற்போது பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலும், ஒயிட்ஃபீல்டு முதல் கே.ஆர்.புரம் வரையிலும் பர்பிள் வழித்தட மெட்ரோ பயன்பாட்டில் இருக்கிறது. இதில் கே.ஆர்.புரம் முதல் பையப்பனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பு சேவை இம்மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் சேவைஇதையடுத்து நாகசந்திரா முதல் புட்டெனஹள்ளி வரையிலான பச்சை வழித்தடம் பயன்பாட்டில் உள்ளது. இதனை அஞ்சனாபுரா முதல் பி.ஐ.இ.சி வரை நீட்டிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கொட்டிகெரே முதல் நாகவரா வரையிலான சிவப்பு வழித்தடமும், பொம்மசந்திரா முதல் லால்பாக் வரையிலான மஞ்சள் வழித்தடமும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் இரண்டு வழித்தடங்களில் பர்பிள் லைன் மெட்ரோவில் அதிகப்படியான பயணிகள் தினசரி பயணிப்பதை பார்க்கலாம்.சிக்னலிங் பராமரிப்பு பணிகள்ஏனெனில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், பிற தொழில் நிறுவனங்கள் இந்த வழித்தடத்தை ஒட்டி அமைந்துள்ளன. இந்த பர்பிள் லைனில் வரும் நாட்களில் சிக்னலிங் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு படிநிலையிலும் சிக்னல்கள் சரியாக வேலை செய்கின்றனவா? சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? புதுப்பிக்க வேண்டிய உபகரணங்கள் எவை? போன்றவை ஆராயப்படும். உடனடியாக சரிசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவை ரத்துஇதற்கான பணிகள் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் மட்டும் பகுதியளவில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
எந்தெந்த தேதிகளில்இதுதொடர்பாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் (BMRCL) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று கெங்கேரி முதல் மைசூரு ரோடு வரை மெட்ரோ சேவை கிடையாது. எஞ்சிய வழித்தடத்தில், அதாவது மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி இடையில் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். இதையடுத்து ஆகஸ்ட் 23, 24 ஆகிய நாட்களில் கெங்கேரி முதல் மைசூரு ரோடு இடையில் காலை 7 மணி வரை மட்டும் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
எந்தெந்த வழித்தடங்களில்அதேசமயம் மைசூரு ரோடு முதல் எஸ்.வி.ரோடு வரையில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும். காலை 7 மணிக்கு பின்னர் கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி வரை மெட்ரோ சேவை முழுமையாக கிடைக்கும். மேலும் ஆகஸ்ட் 20 முதல் 29ஆம் தேதி வரை பையப்பனஹள்ளி முதல் எஸ்.வி.ரோடு வரையிலும், கே.ஆர்.புரம் முதல் ஒயிட்ஃபீல்டு வரையிலும் காலை 7 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது.
ஆகஸ்ட் இறுதி வரைஇந்த நேரத்தில் எஸ்.வி.ரோடு முதல் கெங்கேரி வரை ரயில்கள் இயக்கப்படும். 7 மணிக்கு பிறகு முழு வழித்தடமும் சரியாகி விடும். இத்தகைய சிரமங்கள் இம்மாத இறுதி வரை தொடரும் எனத் தெரிகிறது. அதற்கேற்ப மெட்ரோ ரயில் பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டு கொள்வது அவசியமாகிறது.