'2 கிமீ சாலைக்கு ரூ.500 கோடியா? நிலவுக்கு செல்லும் இஸ்ரோ திட்டமே 450 கோடிதான்' பாஜகவை சரமாரியாக விளாசிய காயத்ரி ரகுராம்!

தமிழக பாஜக நிர்வாகியான காயத்ரி ரகுராம், அவர் மீது கட்சி நடவடிக்கை பாய்ந்ததை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகினார். ஆரம்பத்தில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளை மட்டுமே விமர்சித்து வந்த காயத்ரி ரகுராம், சமீபகாலமாக ஒட்டுமொத்த பாஜகவையும் விமர்சித்து வருகிறார்.

அண்ணாமலையின் நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசிய அமித்ஷாவுக்கு தனது டிவீட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த வாரம் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்ட சம்பவத்தை பேசியதையும் விமர்சனம் செய்திருந்தார் காயத்ரி ரகுராம்.

இந்நிலையில் சிஏஜி அறிக்கையை வைத்து மத்திய அரசான பாஜகவை கடுமையாக சாடியிருக்கிறார் காயத்ரி ரகுராம். அதாவது சிஏஜி எனும் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18.20 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி – ஹரியானா குருகிராமை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH-48-ல் நெரிசலை குறைக்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட 8 வழி துவாரகா விரைவுச்சாலையில் இந்த மோசடி நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதனை வைத்து பாஜக விளாசியுள்ளார் காயத்ரி ரகுராம்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், “2 கிமீ சாலைக்கு 500 கோடியா? நிலவுக்கு செல்லும் இஸ்ரோ திட்டம் 450 கோடி மட்டும் தான் என குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக – கர்நாடகாவில் 40% ஒப்பந்தம், தமிழகத்தில் பாஜகவினர் ED, பினாமி என்ற பெயரில் சாமானியர்களிடம் பணம் பறிக்கிறார்கள் என்பதுதான் இங்கே செய்தி என்றும் பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

ஏன் இவ்வளவு கொள்ளை நடக்கிறது என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றும் 2024 இல் பாஜக தோற்க போகிறதா? அதனால் தான் வழியெங்கும் கொள்ளையடிக்கிறதா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றும் பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.