புதுடெல்லி: “ஊழல், வாரிசு அரசியல், தாஜா (Appeasement) செய்வது ஆகியவை நாட்டின் மகத்துவத்தை பாதிக்கும் மூன்று தீமைகள்” என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார். மேலும், நாட்டினை வளர்ச்சியடைய செய்ய, நன்னடத்தை (சுசிதா), வெளிப்படைத்தன்மை (பர்தர்ஷிதா), பாரபட்சமின்மை (நிஷ்பக்ஷிதா) ஆகியவைகளை ஊக்குவிப்பது நமது கூட்டுப்பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் 77 வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை கொடியேற்றினார். பின்னர் அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில், “நாட்டின் திறனை ஊழல் மிகவும் மோசமாக பாதித்துள்ளது. எந்த வகையிலும் ஊழலை சகித்துக்கொள்ள முடியாது என்று நாடு உறுதியேற்க வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடுவது எனது வாழ்நாள் லட்சியம். எனது அரசு, நலத்திட்ட உதவிகளை போலியாக பெற்றுவந்த 10 கோடி பயனாளிகளை களையெடுத்துள்ளது.
முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்துக்களின் பறிமுதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. தாஜா செய்யும் அரசியல், சமூக நீதிக்கு மிகவும் கேடு விளைவிக்கும் ஒன்றாகும்” என்றார். மேலும், வாரிசு அரசியலால் ஜனநாயகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, வாரிசு அரசியலை மேற்கொள்ளும் கட்சிகள் ‘குடும்பமே கட்சி, குடும்பத்துக்காகவே கட்சி’ என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டுவருவதாக குற்றம்சட்டினார்.
சுமார் 90 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, தனது உரையில் மத்திய தர வகுப்பினர், பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் போன்றவகளை குறித்தும் பேசினார். படிக்க > அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் பெரும் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும்: பிரதமர் மோடி