ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்க மாட்டோம் பிடிவாதம்!| Do not recommend generic drugs stubbornly!

புதுடில்லி, ‘டாக்டர்கள், ‘ஜெனரிக்’ மருந்துகளை கட்டாயம் பரிந்துரைக்க வேண்டும் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும். நம் நாட்டில், ‘ஜெனரிக்’ மருந்துகளின் மீதான தரக்கட்டுப்பாட்டு நடைமுறை மிகவும் பலவீனமாக உள்ளது’ என, இந்திய மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளில், ‘பிராண்டட்’ மருந்துகள், ‘ஜெனரிக்’ மருந்துகள் என இருவகைகள் உள்ளன. இந்த, ‘பிராண்டட்’ வகை மருந்துகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.

அதே, ‘பிராண்டட்’ மருந்துகளில் உள்ள மருத்துவ மூலப்பொருட்களை உடைய மருந்துகள், பல்வேறு சிறு நிறுவனங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை, ‘ஜெனரிக்’ மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

உரிமம் எதற்கு?

உதாரணத்திற்கு, ‘பாராசெட்டமால்’ என்பது, ‘பிராண்ட்’ பெயர் அல்ல. அது மருத்துவ மூலப்பொருளை குறிக்கும் பொதுவான பெயர். ஆனால், ‘குரோசின், மெடாசின்’ போன்றவை, ‘பிராண்ட்’களின் பெயர்கள்.

‘பிராண்டட்’ மருந்துகளை விட, ‘ஜெனரிக்’ மருந்துகள் பன்மடங்கு விலை குறைவாக விற்கப்படுகின்றன. ஒரு சில உடல்நலக் கோளாறுகளுக்கு, குறிப்பாக புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு சந்தையில் விற்கப்படும் மருந்துகள் அதிக விலை உடையவை.

அதுவே, ‘ஜெனரிக்’ மருந்தாக வாங்கினால், அவை குறைவான விலையில் கிடைக்கின்றன. இதனால், மக்கள் ஜெனரிக் மருந்துகளை பயன்படுத்துவது அதிகரிக்க துவங்கியது.

இந்நிலையில், டாக்டர்கள் ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைப்பதை கட்டாயமாக்கும் விதிமுறையை, தேசிய மருத்துவ கமிஷன் சமீபத்தில் அமல்படுத்தியது.

மீறினால் அபராதம் விதிக்கவும், சம்பந்தப்பட்ட டாக்டரின் உரிமம் குறிப்பிட்ட காலத்துக்கு ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

இந்த நடவடிக்கைக்கு ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.எம்.ஏ., வெளியிட்ட அறிக்கை:

பிராண்டட் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க டாக்டர்களுக்கு அனுமதி இல்லை எனில், அம்மருந்துகளுக்கு எதற்காக உரிமம் அளிக்கப்படுகின்றன. முதலில் அதை ரத்து செய்ய வேண்டும்.

உத்தரவாதம் இல்லை

ஜெனரிக் மருந்துகளின் தரம் குறித்து நிச்சயமற்ற தன்மை இருப்பதே அதை பரிந்துரைப்பதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளது. நம் நாட்டில், ஜெனரிக் மருந்துகளின் மீதான தரக்கட்டுப்பாட்டு நடைமுறை மிகவும் பலவீனமாக உள்ளது.

நம் நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளில், 0.1 சதவீத மருந்துகள் மட்டுமே தரக்கட்டுப்பாட்டு நடைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மருந்துகளின் தரத்திற்கு நடைமுறையில் எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், தரம் இல்லாத மருந்துகளை பரிந்துரைப்பது நோயாளியின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இந்த விவகாரத்தில், தேசிய மருத்துவ கமிஷன் தரப்பில் இருந்து யோசிப்பதை விட, மருந்து நிறுவனங்களின் தரப்பில் இருந்து அரசு யோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் உள்ள அனைத்து பிராண்டட் மருந்துகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.

ஒரே விலை

அதைவிடுத்து, பிராண்டட் மருந்துகள், ஜெனரிக் மருந்துகள் என ஒரே மருந்தை பல பெயர்களில் விற்பனை செய்ய அரசு அனுமதிக்கிறது. இது போன்ற ஓட்டைகள் முதலில் அடைக்கப்பட வேண்டும்.

ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைப்பதில், அவசர கதியில் ஒரு முடிவை தேசிய மருத்துவ கமிஷன் எடுத்துள்ளது. இதுபோன்ற ஊக்குவிப்புக்கான முயற்சிகள் உண்மையானதாக இருக்க வேண்டும்.

தரமான பிராண்டுகளை சந்தையில் கிடைக்கச் செய்துவிட்டு, அவற்றைப் பரிந்துரைக்க டாக்டர்களுக்கு அனுமதி மறுப்பது சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது.

எனவே, ‘ஓர் மருந்து; ஓர் தரம்; ஓர் விலை’ என்ற நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி, அனைத்து மருந்துகளும் ஒரே விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.