''அடுத்தாண்டு தனது வீட்டில்தான் மோடி கொடியேற்றுவார்'' – பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் தனது சுதந்திர தின உரைக்கு எதிர்வினையாற்றிள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமரின் பேச்சு அவரது ஆணவத்தைக் காட்டுகிறது. அடுத்தாண்டு அவர் வீட்டில் கொடியேற்றுவார் என்று கூறியுள்ளார்.

அடுத்தாண்டு செங்கோட்டியில் சந்திப்போம் என்ற பிரதமரின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “உங்களது வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது. 2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே (2023) கூறுவது ஆணவம். அடுத்த ஆண்டு அவர் (பிரதமர் மோடி) மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் உரை நிகழ்வை புறக்கணித்த கார்கே: நாட்டின் 77-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்ததது. இதுகுறித்து கருத்து,” “எனக்கு கண் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தது. நெறிமுறைகளின்படி நான் 9.20 மணிக்கு என்னுடைய வீட்டில் மூவர்ணக்கொடி ஏற்றவேண்டும். அதன் பின்னர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து அங்கும் தேசிய கொடி ஏற்றவேண்டும். அதனால் என்னால் அங்கு (செங்கோட்டைக்கு) செல்ல முடியவில்லை. அங்கு பாதுகாப்பு கெடுபிடி வேறு இருந்ததது. பிரதமர் வெளியேறுவதுக்கு முன்பாக அவர்கள் மற்றவர்களை வெளியேற அனுமதிப்பதில்லை. அதனால் என்னால் நேரத்துக்கு இங்கு வந்திருக்க முடியாது. நேரமின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நான் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்தேன்” என்று கார்கே தெரிவித்திருந்தார்.

இது அவரது கடைசி உரை – மம்தா பானர்ஜி: முன்னதாக மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி திங்கள் கிழமை ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தினத்துக்கு முந்தையநாள் நிகழ்வில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடிஜி, செவ்வாய்க்கிழமை டெல்லி செங்கோட்டையில் ஆற்றும் சுதந்திர தின உரையே, பிரதமராக அவர் ஆற்றவிருக்கும் கடைசி உரை. ‘இண்டியா’ கூட்டணி விரைவில் களத்தில் இறங்கி விளையாடும். அந்தக் கூட்டணி நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்தும். மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவை உறுதியாக தோற்கடிக்கும்” என்று தெரிவித்தார்.

அடுத்தாண்டு செங்கோட்டையில் கொடியேற்றுவேன்: டெல்லி செங்கோட்டையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 10 -வது முறையாக தேசிய கொடி ஏற்றினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய அவர், “அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15ம் தேதி இதே செங்கோட்டையில் நின்று நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிடுவேன். மேலும், உங்கள் வலிமை, உறுதி மற்றும் வெற்றிக்காக அதிக நம்பிக்கையுடன் போராடுங்கள் என வலியுறுத்துவேன்” என்று தெரிவித்திருந்திருந்தார். வரும் 2024ம் ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.