புதுடில்லி, ”சாதி, மதம், மொழி, பிராந்தியம் என, நம் ஒவ்வொருவருக்கும் பல அடையாளங்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாவற்றையும் விட, இந்திய குடிமகன் என்ற அடையாளம் தான், நமக்கு பெருமை தரும் விஷயமாக உள்ளது,” என, ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
நாட்டின், 77வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ரேடியோ மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நேற்று உரையாற்றினார்.
புதிய விடியல்
அவர் பேசியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும், 77வது சுதந்திர தின வாழ்த்துகள். இது, நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் நாள். நகரங்களிலும், கிராமங்களிலும் எல்லா இடங்களிலும் இளைஞர்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சுதந்திர தின விழாவை கொண்டாட தயாராகி வருவதைப் பார்த்து, பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை மக்கள் ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர்.
சாதி, மதம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றை தவிர, நம் ஒவ்வொருவருக்கும் பல அடையாளங்கள் உள்ளன. நம் குடும்பங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில்களுடனும் அடையாளம் காணப்படுகிறோம். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு மிகச்சிறந்த அடையாளம் உள்ளது. அதுதான், இந்திய குடிமகன் என்ற அடையாளம். நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்புகள், கடமைகள், உரிமைகள் உள்ளன.
நம் நாடு, ஜனநாயகத்தின் தாயகமாக திகழ்கிறது. பண்டை காலத்திலிருந்தே ஜனநாயக அமைப்புகள் நம்மிடம் இருந்து வருகின்றன. 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்த தேசம் ஒரு புதிய விடியலுடன் விழித்தெழுந்தது.
தலைமை பொறுப்பு
அன்னிய ஆட்சியில் இருந்து மட்டும் விடுதலை பெறவில்லை; நம் நிலையை மாற்றி எழுதும் சுதந்திரத்தையும் பெற்றோம். சர்வதேச அளவில் மனிதாபிமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ‘ஜி — 20’ நாடுகளின் தலைமை பொறுப்பு நமக்கு கிடைத்துள்ளது. சர்வதேச அளவிலான நடவடிக்கைகளை சரியான திசையில் செலுத்துவதற்கு, நமக்கு இது நல்ல வாய்ப்பை தந்துள்ளது.
ஜி – 20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதன் வாயிலாக, சர்வதேச அளவிலான வர்த்தகம், நிதி ஆகிய துறைகளில் சமமான முடிவுகளை எடுப்பதை நோக்கி, உலக நாடுகளை நகர்த்தும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. வர்த்தகம் மற்றும் நிதியைத் தவிர, மனிதகுல மேம்பாடும் இதில் முக்கிய இடம் பெறுகிறது. உலகளாவிய பிரச்னைகளை கையாளுவதில், அதற்கு தீர்வு காண்பதில், நம் நாட்டின் தலைமைத்துவம் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்