மும்பை மாநகர் சாலைகளில் 54,000 ஓட்டைகள்… 5 வருஷத்தில் இதுதான் ஃபர்ஸ்ட்… செம சம்பவம்!

மும்பை மாநகரம்… இந்த பெயரை கேட்டதும் அப்படியே ஒரு டான் ஃபீலிங் தான் பலருக்கும் தோன்றும். இதை தாண்டி வர்த்தக தலைநகரம் என்ற பெருமையை பெற்று விளங்குகிறது. இதனால் முதலீடுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. வேலைக்காக பல லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். புதிதாக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்படியான வளர்ச்சி பாதையில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

மும்பை நகரின் சாலைகள்

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் சாலைகள். மும்பையின் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதை நெட்டிசன்கள் பல்வேறு வகைகளில் கிண்டலடித்த வண்ணம் உள்ளனர். இதுதொடர்பாக பிரிஹன் மும்பை மாநகராட்சிக்கு (BMC) புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையை பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலம் பருவமழை காலமாகும்.

வறண்ட வானிலை

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் அதிகப்படியான மழை வெளுத்து வாங்கியது. ஒரே நாளில் 200 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்து திணறடித்து விட்டது. தற்போதும் கனமழை பெய்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அப்படி இல்லை. வறண்ட வானிலை காணப்படுகிறது. பருவமழை வேகமெடுக்க இன்னும் ஒருவாரம் ஆகலாம் என்கிறது வானிலை ஆய்வு மையம்.

ஜூலை மாத கனமழை

இதற்கிடையில் ஜூலை மாத கனமழையால் மும்பையில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்திருப்பதாக குவிந்த புகார்களை சரிசெய்யும் வேலைகளில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 54 ஆயிரம் பள்ளங்களை சரி செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். அதேபோல் புகார்களில் புதிய ரெக்கார்ட் தான். இவற்றை சரிசெய்ய 75 சாலை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

சேதமடைந்த சாலைகள்

இவர்களுக்கு கீழ் துணை பொறியாளர்களையும் நியமனம் செய்து 227 வார்டுகளில் சாலை பள்ளங்களை சீர்செய்யும் பணிகளில் இறக்கி விட்டனர். இவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியால் கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் சிறப்பான முறையில் சீரமைக்கப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மாநகராட்சி மும்முரம்

ஒருவேளை பள்ளங்கள் இருப்பது தெரியவந்தால், அவற்றை உடனடியாக புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பி விரைவாக சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு தாஹிசார் பகுதியில் அதிகப்படியான மழை பெய்திருக்கிறது. எனவே தாஹிசார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் பழைய டெக்னாலஜி

சாலைகளை சரிசெய்ய பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை மும்பை மாநகராட்சி சோதனை செய்து பார்த்தது. ஆனால் எதுவும் கச்சிதமாக எடுபடவில்லை. எனவே ரோடு ரோலர் மூலம் போடப்படும் பழைய முறைக்கே மும்பை மாநகராட்சி திரும்பியுள்ளதாம். இந்நிலையில் மேற்கு பகுதி நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக சரிசெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.