திருச்சி:
மதுரையை விடாமல் துவசம்சம் செய்து வந்த மழை இன்று இரவு திருச்சியை பதம் பார்க்கவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தீவிரம் காட்டி வந்த தென்மேற்கு பருவமழை, அப்படியே தமிழகத்தில் ஒரு விசிட்டை போட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் தென் பகுதிகளிலும், மேற்கு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
அதிலும் மதுரையை விடாமல் வைத்து செய்து வருகிறது மழை. தொடர்ந்து 11 நாட்களாக பெய்த மழையில் மதுரையே திக்குமுக்காடி போயுள்ளது. இன்றைக்கு வடக்கு மதுரையில் மிக கனமழை பெய்தது.
இந்த சூழ்நிலையில், தற்போது மதுரையை சூழ்ந்திருந்த மழை மேகங்கள் திருச்சியை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். கடல் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் மேகங்கள் அதிவேகத்தில் திருச்சிக்கு சென்று கொண்டிருக்கின்றன. இதனை பார்க்கும் போது, திருச்சியில் இன்று இரவு 11 மணிக்குள் மேகங்கள் முகாமிட்டு கனமழை பெய்யும் என அவர் கூறியுள்ளார்.
மதுரையை போல திருச்சிக்கு செல்லும் மேகங்களும் அதிக அடர்த்தியாக இருப்பதால், அங்கு தொடர்ந்து பலத்த மழை பெய்யும் எனத் தெரிறது.