மதுரை: தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த விமானத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக மாணவி சோபியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
தமிழிசை சவுந்தர்ராஜன் 2018-ல் தமிழக பாஜக தலைவராக இருந்தார். அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தபோது, அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி லூயிஸ் சோபியா என்பவர் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக கோஷம் எழுப்பினார். இதனால் விமான நிலையத்தில் தமிழிசைக்கும், சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியா மீது தூத்துக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சோபியா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘நான் பயணம் செய்த விமானத்தில் தமிழிசையும் பயணம் செய்தார். விமானத்தில் இருந்து இறங்கும்போது நான் மத்திய அரசை விமர்சித்து கோஷம் எழுப்பினேன். இதனால் கோபமடைந்த தமிழிசை என்னை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டினார். அவருடன் வந்தவர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். ஆனால் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் முதலில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தமிழிசை, ஆளுனரானதால் அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தன்னை இணைத்துக் கொண்டு வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், சோபியாவின் மனு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், ”மனுதாரர் மீது சென்னை நகர் போலீஸார் பயன்படுத்தும் சட்டப்பிரிவின் கீழ் தூத்துக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சட்டத்தை சென்னை, கோவை, மதுரை மாநகர் போலீஸார் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்பிரிவின் கீழ் தூத்துக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்ய முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை” என்றார்.
இதைப் பதிவு செய்துகொண்டு, சோபியா மீது தூத்துக்குடி போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.