ரஜினியின் `ஜெயிலர்’ படத்தில் செம மாஸ் காட்டியதில், சிவ ராஜ்குமார் அடுத்து தமிழில் நடிக்கும் `கேப்டன் மில்லர்’ படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. தனுஷ் இப்போது தனது ஐம்பதாவது படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தனுஷ் வட்டாரத்தில் கிடைத்த அப்டேட்கள் இதோ…
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது. தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட படத்தை டிசம்பருக்குத் தள்ளி வைத்திருக்கின்றனர். இது 1930-கள் உட்பட சில பல காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால், அந்தந்த காலகட்டத்திற்கான விஷயங்களை செட்கள் அமைத்துச் செய்திருக்கிறார்கள். இருந்தும் அது தொடர்பான கிராபிக்ஸ் பணிகள் கொஞ்சம் மீதம் இருப்பதால், ரிலீஸை டிசம்பருக்குத் தள்ளி வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்கள் தவிர, சிவ ராஜ்குமார், அமெரிக்க நடிகர் எட்வர்ட் சொனென்பிளிக், ஜான் கொகேன், நிவேதா சதீஷ், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நாசர் எனப் பலரும் நடித்துள்ளனர். சென்னை, குற்றாலம், தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்துக்கான பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளில் இறங்கிவிட்டார். தனுஷின் பிறந்த நாளில் டீசர் வெளியானதைத் தொடர்ந்து அடுத்துப் படத்தின் முதல் சிங்கிள் லிரிக் வீடியோவை எதிர்பார்க்கின்றனர் தனுஷின் ரசிகர்கள். அடுத்த மாதம் இறுதியில் இந்த முதல் சிங்கிள் வெளியாகலாம் என்கிறார்கள்.
சிவ ராஜ்குமாருக்கு படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் என்பதை முன்பே சொல்லியிருந்தோம். இதில் அவர் தனுஷின் அண்ணனாக நடிக்கிறார் என்றும், கொள்ளைக்காரராக மிரட்டவிருக்கிறார் என்றும், கூடவே மெயின் வில்லனே அவர்தான் என்றும் சொல்கிறார்கள்.
தனுஷின் ஐம்பதாவது படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் தொடர்ந்து நைட் ஷூட் ஆக பரபரவென நடந்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ‘சித்தப்பு’ சரவணன் எனப் பலரது காம்பினேஷன்களை தனுஷ் இயக்கியும் நடித்தும் வருகிறார். இந்தப் படத்தை வருகிற அக்டோபருக்குள் ஒரே மூச்சில் முடித்துவிடத் தீர்மானித்திருக்கிறார்கள். இதனை அடுத்து சேகர் கம்முலாவின் படத்திற்குச் செல்லும் தனுஷ். அதன்பிறகே மாரி செல்வராஜின் படத்திற்கு வருகிறார்.