புதுடெல்லி: பாரம்பரிய கைவினைத் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள் பயனடைய வகை செய்யும் ‘பிரதமரின் விஸ்வகர்மா’ திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நெசவாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள், கருவிகள் செய்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்தம் செய்வோர் என பாரம்பரிய கைவினைத் தொழில் செய்யக்கூடிய சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பலனடைவார்கள்.
இத்திட்டம் இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் கட்டத்தில், இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். அடிப்படை பயிற்சி முதல் மேம்பட்ட பயிற்சி வரை இதில் வழங்கப்படும். அதோடு, நவீன உபகரணங்களை வாங்க ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், குறைந்தபட்சம் 5 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடனாக வழங்கப்படும். இரண்டாம் கட்டமாக, ரூ.2 லட்சம் வரை அவர்களுக்கு கடன் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தத் திட்டம் குறித்து நேற்றைய சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டம் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். நெசவாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள், கருவிகள் செய்யக்கூடியவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்தம் செய்பவர்கள் ஆகியோரின் குடும்பங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்படும். ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரையிலான மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.