வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரி அரசுத் துறைகளில் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். அதனையடுத்து, பல்வேறு அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, போட்டி தேர்வுகளும் நடதப்பட்டு வருகிறது.
இதுவரை 1,015 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். போட்டித் தேர்வுக்கு பள்ளி பாட புத்தகங்களை தாண்டி நுாலங்களில் உள்ள போட்டி தேர்வு நுால்களையும் இளைஞர்கள் தேடி பிடித்து வருகின்றனர்.
இதனால், நுாலகங்களில் ரெபரன்ஸ் பிரிவில் போட்டித் தேர்வு நுால்களை படிக்க போட்டா போட்டி காணப்படுகின்றது.ஆனால், குறைவான நுால்களே உள்ள சூழ்நிலையில் பலருக்கு போட்டி தேர்வு நுால்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்றசூழ்நிலையில் போட்டித் தேர்வுக்கு தயராகும் புதுச்சேரி இளைஞர்களுக்கு கைகொடுப்பதற்காக அனைத்து நுாலகங்களிலும் போட்டித் தேர்வு நுால்களை டிஜிட்டல் வடிவில் கொடுக்க கலை பண்பாட்டு துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளது.உறுப்பினராக உள்ள இளைஞர்கள், அருகில் உள்ள நுாலகத்திற்கு சென்றதும், தனி பாஸ்வேர்டு தரப்படும். அதனை கொண்டு டிஜிட்டல் போர்ட்டலில் உள்ளே நுழைந்து தங்களுக்கு தேவையான போட்டித் தேர்வு நுால்களை மொபைலில் தேடி படிக்கலாம்.
இந்த டிஜிட்டல் போர்ட்டலில் மொத்தம் 5 ஆயிரம் போட்டி தேர்வு நுால்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேசிய அளவிலான அரசுப் பணியிடங்களுக்கு படித்து பயன்பெறலாம்.
டிஜிட்டல் வடிவில் தரப்பட உள்ள போட்டி தேர்வு நுால்கள் அப்டேட்டுடன் இருக்கும்போது, நுாலகத்தில் தனிப்பிரிவில், 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட, பழைய நுால்கள் மட்டுமே உள்ளன.
பல ஆண்டுகளாக புதுச்சேரியில் போட்டித் தேர்வு நடக்காததால், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் குறைவாக உள்ளன. குறிப்பாக அவை அப்டேட் செய்யப்பட்ட நுால்கள் இல்லை.
இதனால் இளைஞர்கள் சொந்தமாக போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கி வந்து நுாலகங்களில் அமர்ந்து படித்துவிட்டு செல்கின்றனர்.
எனவே, அனைத்து நுாலகங்களிலும் ரெபரன்ஸ் பிரிவில் அப்டேட் செய்யப்பட்ட போட்டித் தேர்வு நுால்களை வைக்க கலை பண்பாட்டு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பட்டதாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement