மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைத்துள்ளதால் இந்த ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மையானதாக கருதப்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைதமிழகத்துக்கு வருவதை அறிந்த தமிழக மக்கள் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்யது முதல் நிதி ஒதுக்குவது வரை, கடந்த 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டது.
தஞ்சையை விரும்பிய அதிமுக.. கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு இந்த மருத்துவமனையை தஞ்சாவூர் அருகே கொண்டு செல்வதற்கு முடிவு செய்திருந்ததால் மதுரையில் அமையும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பெரிய ஆர்வம் காட்டவில்லை. அதனால், நிலம் ஒதுக்கீட்டில் சிறிது காலம் இந்த மருத்துவமனை திட்டப்பணிகள் தாமதமானது. அதன்பின் இடம் ஒப்படைக்கப்பட்டு, நிதி ஒதுக்குவது தாமதமானது.
இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கியது. ஆனால், தமிழகத்தில் அமையும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டது. அந்த நிறுவனம், கடன் வழங்க ஒப்புக் கொண்டாலும், அதற்கான நடைமுறைகள், ஆய்வுப் பணிகளுக்கு தாமதம் செய்தது.
திமுகவின் வாக்குறுதி: இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் வந்தநிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணிகள் உடனடியாக தொடங்கும் என மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருந்தனர். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகும், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணி தொடங்கவில்லை.
இதற்கிடையில், மத்திய அரசு, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணியை தொடங்காமலேயே, இந்த மருத்துவமனை கல்லுரிக்கான 50 எம்பிபிஎஸ் இடத்துக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி, மதுரையில் வகுப்பறை வசதியில்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில், தற்காலிகமாக வகுப்புகளை தொடங்கியது. தற்போது மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துக்கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டாக படித்துக் கொண்டிருக்கின்றனர்.
தொடரும் மோதல்: மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விவகாரத்தில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இன்னும் முட்டல், மோதல் அதிகமானது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வெளிப்படையாகவே மத்திய அரசு மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவதற்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எந்த முயற்சியும் செய்யயவில்லை, மத்திய அரசாலே இந்த பணிகள் தாமதமாகுவதாக குற்றம்சாட்டினார். அதற்கு மத்திய அரசு பதிலுக்கு திமுக அரசை குற்றம்சாட்டவே, மத்திய, மாநில அரசுகளின் இந்த முரண்பட்ட பதில்களால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வருமா? வராதா? என தென் மாவட்ட மக்கள் குழப்பமடைந்தனர்.
மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்தவமனையுடன் அறிவித்த நாட்டின் பிற மருத்துவமனை கட்டுமானப்பணிகள் முடிந்தும், தொடங்கியும் நடக்கும் நிலையில் 2022-ல் திறக்கப்பட வேண்டிய மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மட்டுமே, பணிகள் எதுவுமே துவங்காமல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது.
பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டு விழாவில் 45 மாதங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் எனக் கூறிய நிலையில் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ ஒதுக்கிய 224.24 ஏக்கர் இடம் வெறும் பொட்டல்காடாக காட்சி அளிக்கிறது. அதனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தமிழக அரசியல் தொடங்கி நாடாளுமன்றம் வரை பேசுபொருளாகி விவாதிக்கப்பட்டது.
தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில் சுற்றுச்சுவர் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
டெண்டர் வெளியீடு: இந்நிலையில் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைக்கப்பட்டுள்ளதால் 222.47 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு கட்டங்களாக பணிகள் நடைபெறும் எனவும், 33 மாதத்தில் பணிகளை முடிப்பதற்கான ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை வளாகம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான 30 படுக்கைகளுடன் கூடிய அறை, 150 எம்பிபிஎஸ் மாணாக்கர்கள் செவிலியர்கள் பயிலும் வகையிலான வகுப்பறைகள், அவர்களுக்கான தங்கு விடுதிகள், ஆடிட்டோரியம், உணவகம, மாணாக்ககர்களுக்கான தங்கு விடுதிகள், இயக்குனருக்கான தங்கு இல்லம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உணவகம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டிட பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 2026ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடியும் எனக் கூறிவரும் நிலையில் கட்டிடப் பணிகள் எப்போதும் தொடங்கும் என்பதற்கான கேள்விக்கான விடை எப்போது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனியாவது, தென் மாவட்ட மக்களின் உயிர் காக்கும் உயர் சிகிச்சை தர காத்திருக்கும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அரசியல் செய்யாமல் விரைவாக கட்டுமானப்பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.