பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சிகளின் `இந்தியா (I.N.D.I.A)’ கூட்டணி என்ற இரு அணிகளிலும் சேராமல் தனியாக 2024 லோக் சபா தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் (கே.சி.ஆர்) பாரத ராஷ்டிர சமிதியும் (பி.ஆர்.எஸ்) ஒன்று. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட “பி.ஆர்.எஸ் கட்சி `I.N.D.I.A’ அல்லது ‘NDA’ ஆகிய இரண்டு கூட்டணியிலும் இல்லை. அதே நேரம், நாங்கள் தனியாகவும் இல்லை. எங்களுடன் எங்கள் நண்பர்களும் இருக்கிறார்கள்” என்று கே.சி.ஆர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கே.சி.ஆரின் மகளும், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் விசாரணைக்குள்ளாகி சமீபகால அரசியலில் கவனம் பெற்றவருமான கே.கவிதா, காங்கிரஸையும், ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
தெலங்கானாவில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கவிதா, “ராகுல் காந்தி பாரத் ஜோடோ பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். அதனை, 1,000 எலிகளைக் கொன்ற பூனை யாத்திரை செல்வதாகத் தான் நான் உணர்கிறேன். அப்படித்தான் ராகுல் காந்தி நடந்துகொண்டார். நாடு சுதந்திரமடைந்த பிறகு காங்கிரஸ் 62 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இஸ்லாமியர்களுக்கு நீங்கள் (காங்கிரஸ்) என்ன செய்தீர்கள்… ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள்… ஏழைகளைத் தான் நீங்கள் அகற்றினீர்கள், வறுமையை அல்ல.
காங்கிரஸ் தலைவர்கள் பல தலைமுறைகளாக ஆட்சி செய்தும் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. அரசியல் சாசனமும், ஜனநாயகமும் அச்சுறுத்தலில் இருப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால், உண்மை என்னவென்றால் தெலங்கானாவில் சக்திவாய்ந்த ஜனநாயகம் இருக்கிறது.
தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளில் முதல்வர் கே.சி.ஆர் ஏற்படுத்திய புரட்சியை யாராலும் கொண்டுவர முடியவில்லை. குறிப்பாக, கே.சி.ஆரின் 10 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தில் எந்த வகுப்புவாத வன்முறையும் நடைபெறவில்லை. எனவே, காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை நமது சிறுபான்மை சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.
தெலங்கானாவில் தற்போது சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருக்கும் கவிதா, அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது பேச்சாக இருக்கிறது.