'ஹவுஸ்ஒயிஃப்’, ’அடல்டரஸ்' போன்ற பாலின பேத வார்த்தைகளுக்கு விடைகொடுத்த உச்ச நீதிமன்றம்: புதிய கையேடு வெளியீடு

புதுடெல்லி: பெண்களுக்கு தவறான முத்திரை குத்தும் பாலின பேத வார்த்தைப் பிரயோகங்களை நீக்கி புதிய சட்டக் கையேட்டை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்தக் கையேட்டினை வெளியிட்டுள்ளார்.

ஹவுஸ் ஒயிஃப், நம்பிக்கைக்குரிய அல்லது கீழ்ப்படிதலுள்ள மனைவி, ஹெர்மாஃப்ரோடைட் (இரு பாலின உறுப்புகளைக் கொண்டவர்களைக் குறிக்கும் சொல்), ஈவ் – டீஸிங், தந்தை பெயர் தெரியாத குழந்தை, சைல்ட் ப்ராஸ்டிட்யூட் உள்பட பல வார்த்தைகளைப் பயன்பாட்டில் இருந்து நீக்கி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. 30 பக்கங்கள் கொண்ட இந்தக் கையேடு நீதித்துறையில், சட்ட சமூகத்தில் இயந்திரத்தனமாக பயன்படுத்தப்படும் பாலின பேத வார்த்தைகள் நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு, உத்தரவு மொழிகளில் பாலின பேதம் நிறைந்த வார்த்தைகளைத் தவிர்க்க இந்தக் கையேடு கொண்டுவரப்பட்டுள்ளது.

பெண்களின் குணாதிசயங்கள் என்று காலங்காலமாக முத்திரை குத்தப்பட்ட சில சொற்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பெண்கள் அதீத உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களால் எதிலும் முடிவெடுக்க முடியாது போன்ற முத்திரைகள் தற்போது உள்ளன. ஆனால் முடிவு எடுக்கும் திறனுக்கும் பாலினத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதேபோல் ஒரு பெண் அணியும் ஆடைகள் அவரது குணநலன்களை நிர்ணயிக்காது. நவநாகரிக ஆடைகள் அணிவதையும் ஒரு பெண்ணின் பாலுறவு பின்னணியையும் கொண்டு அவரை நிர்ணயிக்கக்கூடாது. இவ்வாறு முத்திரை குத்துதல் பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்கும்போது சம்பந்தப்பட்ட பெண்ணை முன்முடிவோடு அணுக வழிவகுக்கும். அதனால் நடுநிலையான நீதி வழங்க இயலாமல் போகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக பாலியல் உறவில் ஒரு பெண்ணின் சம்மதம் எவ்வளவு முக்கியம் என்பதை இத்தகைய முத்திரைகள், முன்முடிவுகள் பார்க்கத் தவறிவிடுகின்றன. இவ்வாறு அந்தக் கையேட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கையேட்டை வெளியிட்டுப் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “பெண்களை முன்முடிவுகளோடு அணுகுவது என்பது அவர்களுக்கான நீதி வழங்குதலில் சறுக்கலை ஏற்படுத்தும். முத்திரை குத்தும் பாலின பேத வார்த்தைகள் கொண்ட மொழி அரசிய சாசன பண்புகளுக்கு எதிரானது. சட்டத்தின் உயிர்நாடியில் மொழி மிகமிக முக்கியமானது. சட்டத்தின் மதிப்பீடுகளை சுமந்து செல்லும் வாகனம் தான் மொழி. வார்த்தைகள் தான் ஒரு வழக்கில் நீதிபதியின் பார்வையை ஒட்டுமொத்த தேசத்துக்கும் எடுத்துச் செல்லும். நீதிபதிகளில் மொழி சட்டத்தை ஆராய்ந்து விளக்குவதோடு, சமுதாயத்தின் மீதான அவர்களின் பார்வையையும் பிரதிபலிக்கக்கூடியவை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.