அதிமுக பிரமுகர் பாடியநல்லூர் பார்த்திபன் கொலை – நடைபயிற்சிக்கு சென்றவரை தீர்த்துக் கட்டிய கும்பல்

சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (53). இவர் அதிமுக அம்மா பேரவையில் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தார். அதோடு, பாடியநல்லூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பார்த்திபன் மீது ஆந்திர மாநிலம் கடப்பா காவல் நிலையத்தில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த பார்த்திபன், தன்னுடைய சொந்த ஊரில் தங்கியிருந்தார்.

கொலை

இவர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி இன்று காலையில் வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்கு பார்த்திபன் சென்றார். பாடியநல்லூர் கோயில் மைதானம் அருகே இவர் சென்று கொண்டிருந்த போது மூன்று பைக்குகளில் வந்த ஆறுபேர் கொண்ட கும்பல் திடீரென பார்த்திபனை வழிமறித்து கண்இமைக்கும் நேரத்தில் அவரை வெட்டத் தொடங்கியது. அதனால் பார்த்திபன், அங்கிருந்து ஓடத் தொடங்கினார். ஆனாலும் அந்தக் கும்பல் சுற்றி வளைத்து அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதோடு செங்குன்றம் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். பார்த்திபனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பார்த்திபன் ஏற்கெனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதையடுத்து செங்குன்றம் போலீஸார், பார்த்திபனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தைக் கேள்விபட்டதும் பார்த்திபனின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், உறவினர்கள் அங்கு குவிந்தனர். அதனால் சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு விசாரித்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமலிருக்க பாடியநல்லூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பார்த்திபனைக் கொலை செய்தவர்களைப் பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார், பார்த்திபன் கொலை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் பதிவாகியிருக்கும் பைக்குகளின் பதிவு நம்பர்கள் அடிப்படையிலும் கொலையாளிகள் தப்பிச் சென்ற வழித்தடங்களில் உள்ள அடுத்தடுத்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பார்த்திபன்

இது குறித்து செங்குன்றம் போலீஸார் கூறுகையில் “கொலை செய்யப்பட்ட பார்த்திபன் ஏரியாவில் செல்வாக்கு மிக்கவர். அ.தி.மு.கவிலும் ஊராட்சி மன்றத்திலும் தலைவராக இருந்தார். இவர் மீது செம்மரக்கடத்தல் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் அண்ணன் நடராஜன் மீதும் வழக்குகள் உள்ளன. ரியல் எஸ்டேட் பிசினஸிலும் பார்த்திபன் ஈடுபட்டு வந்தார் அதனால் பார்த்திபனுக்கு எதிரிகள் அதிகமாகினர். இருப்பினும் பார்த்திபனின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அவரை எதிரிகள் யாரும் நெருங்க முடியாத சூழல் இருந்து வந்தது. அதனால்தான் பார்த்திபனின் செயல்பாடுகளை சில நாள்களாக கண்காணித்த ஒரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கிறது. எப்போதும் பார்த்திபன் கூட அவரின் ஆதரவாளர்கள் இருப்பார்கள். அதனால்தான் நடைபயிற்சிக்கு அவர் செல்வதை நோட்டமிட்டு இந்தக் கொலை நடந்திருக்கிறது. கொலையாளிகள் சிக்கினால்தான் என்ன காரணத்துக்காக பார்த்திபன் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமலிருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொலையாளிகளைப் பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.