குழந்தை நட்சத்திரமாக இருந்து பல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகப் பயணித்து, அனைவருக்கும் பரிச்சயமானவர் பூர்ணிதா என்கிற கல்யாணி. திரைத்துறையைத் தாண்டி, தனக்கென சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் கல்யாணி, சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இல்லை.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/74880e1c_cdad_458b_bfa0_69f0391fa219.jpg)
இந்நிலையில் தன்னுடைய கடினமான சூழலைக் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் கல்யாணி. அதில், “2016-ம் ஆண்டில் எனக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு என் மகள் நவ்யாவை பெற்றெடுத்தேன்.
கடந்த ஆறு மாதங்களாக எனது முதுகில் வலி அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் முதுகெலும்பு நிபுணரிடம் ஆலோசனை பெற்றேன். அப்போதுதான் நான் எதிர்பாராத விஷயங்களைக் கேட்டேன்.
என்னுடைய முந்தைய அறுவை சிகிச்சை குணமாகவில்லை என்றும், எனது முந்தைய அறுவை சிகிச்சையில் பொருத்தப்பட்ட ஸ்க்ரூஸ் மற்றும் பிளேட்டுகளை அகற்றி, என் முதுகுத்தண்டில் ஒரு புதிய எலும்பைப் பொறுத்த வேண்டும் என்றும் அறிந்தேன்.
இந்த முறை குணமடைவதற்கு அதிக காலம் எடுக்கலாம், ஆனால் உதவிய மருத்துவக்குழுவுக்கு நன்றி. அதோடு கடினமான சூழலில் என்னுடைய கைகளை இறுகப்பற்றி உறுதுணையாக என் கணவர் மற்றும் 5 வயது மகள் நவ்யாவும் இருந்தனர்.
எனக்கு எதிரில் நீளமான பாதை இருக்கிறது; ஆனால், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது குடும்பம் எனக்காக நிற்பதற்காக நன்றியுடன் இருக்கிறேன். இனி ஒருபோதும் எனது ஆரோக்கியத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Screenshot_2023_08_17_115336.png)
அதோடு பொய்யான தகவலைப் பரப்பும் மற்ற சமூக வலைதள பக்கங்களை நம்ப வேண்டாம். சிகிச்சைக்கு பின் எனது மனநலத்தில் கவனம் செலுத்த உள்ளேன்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு கல்யாணியின் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கமென்ட் செய்து வருகின்றனர்.
மீண்டு வாருங்கள் கல்யாணி!