`இல்லை என்ற சொல்லை நான் பயன்படுத்தியதில்லை’ என தன்னிடமிருக்கும் பொருட்களை வைத்தே விவசாயி ஒருவர் டிராக்டரை உருவாக்கியுள்ள சம்பவம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
பீகாரின் புல்வாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான வினோத் குமார் படேல். இவர் தன்னுடைய நிலத்தை உழுவதற்கு டிராக்டர் ஒன்றை வாங்க முற்பட்டிருக்கிறார். ஆனால் தன்னிடம் அதற்கான பணம் இல்லை என்பதை அறிந்தவர், அதை சவாலாக எடுத்துக்கொண்டு 1 வருடத்தில் 2 லட்ச ரூபாய் செலவு செய்து தன்னிடம் இருந்த பம்ப் செட் இயந்திரத்தின் என்ஜினை வைத்து டிராக்டரை உருவாக்கி இருக்கிறார்.
தேவையற்ற பொருள்களோடு கிடப்பில் போட்டு வைக்கப்பட்ட 35 ஹார்ஸ் பவர் கொண்ட பம்ப் செட் இயந்திரத்தின் இன்ஜினை இதற்காகப் பயன்படுத்தி இருக்கிறார். ஒரே ஒரு சக்கரத்தைத் தவிர்த்து டிராக்டரின் பாக்ஸ், கியர் போன்ற அனைத்தும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கிறது. டிராக்டரின் எக்ஸ்ட்ராக்ட்ரை வெல்டிங் செய்து, அதன் பின்னர் பம்ப் செட்டோடு இணைத்துள்ளார்.
“டிராக்டர் வாங்க போதுமான பணம் இல்லாத சூழலால், அதனை கட்டமைக்க அதிக நேரம் செலவழிக்க நேர்ந்தது. வழக்கமான டிராக்டர் செய்யும் வேலையை இந்த டிராக்டர் செய்கிறது. இந்த டிராக்டரை கொண்டு 30 சென்ட் நிலத்தை உழ முடியும்.
ஒரே நாளில், இந்த டிராக்டர் உருவாக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. விவசாயிகள் பலரும் இதனைப் பாராட்டி வருகின்றனர். அதோடு கூடவே புது ஆர்டர்களும் குவிந்து வருகின்றன.
இதுவரை 25 டிராக்டர்களுக்கான ஆர்டர்கள் வந்துள்ளன. சில பொருளாதார காரணங்களால் அவற்றைத் தயாரித்து டெலிவரி செய்வதில் சிக்கல் இருக்கிறது. இதைச் சமாளிக்க வாடிக்கையாளர்களிடம் டிராக்டரின் பணத்தில் 50 சதவிகிதத்தை முன்பணமாக தருமாறும், டிராக்டரை டெலிவரி செய்த பின் மீத பணத்தைத் தருமாறும் கூறி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.