என்எல்சியில் தொடர் விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? – ஐகோர்ட் கேள்வி

சென்னை: என்எல்சி சுரங்கத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துகள் மூலம் தொழிலாளர்கள் உயிரிழப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்ததில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சிலர் காயமடந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, என்எல்சி அதிகாரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காரமன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், “சுரங்கத்தில் ஏற்படும் விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடோ அல்லது கருணைத் தொகையோ வழங்கவில்லை. விபத்துகள் தொடர்பாக காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்எல்சிக்கு சாதகமாக செயல்படுகிறது” என்று வாதிட்டார். காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள்செல்வம், என்எல்சியில் தொடர்ச்சியாக இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்எல்சி தரப்பு வழக்கறிஞர் நித்தியானந்தம், “விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் , காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. இடையீட்டு மனுதாரர்கள் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிதாக்கி அரசியல் செய்கின்றனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கு தங்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முடியாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஓரிரு விபத்துகள் என்றால் தொழிலாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தொடர்ச்சியாக இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதை எப்படி எடுத்துக்கொள்வது?” என கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.