நடிகர் ராமராஜன் நீண்ட இளைவெளிக்குப் பிறகு `சாமானியன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இயக்குநர் ராகேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் சில தினங்களுக்கு முன்பு சாமானியன் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராமராஜன் பட்டுக்கோட்டையில் புகழ்பெற்ற நாடியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அப்பகுதியினர் ராமராஜனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். மாறாத அன்பை வெளிப்படுத்தியதில் நெகிழ்ந்திருக்கிறார் ராமராஜன்.
அடுத்த சூப்பர் ஸ்டார் யார், சாமானியன் படம் ஆகியவை குறித்து ஆனந்த விகடனுக்காக ராமராஜனிடம் சிறப்பு பேட்டி எடுத்தேன். சாமானியன் படம் அவருக்குள் புது தெம்பை கொடுத்திருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. ராமராஜன் பேசியதிலிருந்து, “சாமானியன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய இயக்குநர், தயாரிப்பாளர், நான் மற்ற டெக்னீசியன்கள் எல்லாம் வழக்கறிஞர்களாக இருந்து வாதாடி படத்தை முடித்து விட்டோம். தீர்ப்பு நீதிபதியாகிய மக்கள் கையில் தான் உள்ளது. படம் வெளியாவது குறித்து முறைப்படி தயாரிப்பாளர் அறிவிப்பார்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட சாமானியன் படத்தை மக்கள் வரவேற்ப்பார்கள் என்ற நம்ப்பிக்கை எனக்கு இருக்கிறது. பெரும் விபத்திலிருந்து மீண்டு, கொரோனா காலத்தையும் தாண்டி வந்து நான் இதுபோன்ற ஒரு படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஐம்பது படம் வரை நாயகனாக நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் எனக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. விஜய் மில்டன், வெங்கட் பிரபு இன்னும் பலர் என்னிடம் கதை சொன்னார்கள். பல வாய்ப்புகள் வந்தது ஆனால் எனக்கு மைண்ட் செட் ஆகவில்லை என்பதால் அதில் நடிக்கவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கிறேன் அதற்கு ஏற்ற கதையாக சாமானியன் அமைந்துள்ளது. எனக்கு வலது கையாக ராதாரவியும், இடது கையாக எம்.எஸ்.பாஸ்கரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். என் படம் ஒன்றில் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் சாமானியனில் நடித்திருப்பது மிகப்பெரிய ப்ளஸ் அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன்.
என் படத்துக்கு, 23 வருடங்களுக்குப் பிறகு அண்ணன் இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். அவரது குரலில் பாடல் ஒன்றும் பாடியிருக்கிறார். ரீ ரெக்கார்டிங்கில் மிரட்டியிருக்கிறார் இது படத்துக்கு பெரும் பலத்தைத் தந்திருக்கிறது. அன்னக்கிளி படத்தின் போது இருந்த அதே வேகம் இளையராஜாக்கிட்ட இன்னும் அப்படியே இருக்கு. என் படங்கள் வெளி வராமலேயே மக்கள் என்னைப் பற்றி நினைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இளையராஜா அண்ணனுடைய பாட்டுதான். அவர் பாட்டு என்ழன மக்கள் மனதில் நிலைத்து நிற்கச் செய்து விட்டது.
ஜெயிலர் படம் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள் அதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. இந்த வயதிலும் ரஜினி இப்படி நடித்திருப்பது கிரேட். நான் இன்னும் ஜெயிலர் படத்தை பார்க்கவில்லை. தம்பி விஜய் வசூல் ரீதியாக ரஜினையை தாண்டி உயரத்துக்கு சென்று விட்டார். லியோ படம் பெரிய அளவில் வியாபாரம் ஆகியுள்ளது.
எல்லாத்தையும் மக்கள் தான் முடிவு செய்வார்கள். எனக்கும் மக்கள் நாயகன் பட்டத்தைக் கொடுத்தனர். என் பாதை தனி அந்தப் பாதையில் நான் செல்கிறேன். அதில் யாரையும் பின் தொடர்ந்து வாருங்கள் என்று சொல்ல மாட்டேன். அடுத்து நான் என்ன படம் பண்ணப் போறேன் என்ற யோசனை மட்டும் தான் எனக்குள் இருக்கு மற்றவர்களைப் பற்றி நினைப்பதில்லை. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என எனக்கு எல்லா நடிகரையும் பிடிக்கும்.
எல்லோருடைய படங்களும் நல்லா ஓடணும். தயாரிப்பாளர் லாபம் சம்பாதிக்கணும். சினிமாத்துறை நல்லா இருக்கணும் சினிமாதான் என்னை வாழ வைத்து சோறு போட்டது. எனக்குத் தமிழ் மொழி மட்டும் தான் தெரியும். தமிழில் மட்டும் தான் என் படம் வெளியாகும் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் என் படத்தை விரும்பிப் பார்த்து ரசிப்பார்கள். எனக்கு என குறிப்பிட்ட வட்டம் உள்ளது. சினிமா வண்டிச்சக்கரம் போன்றது. சக்கரம் எப்படி கீழிருந்து மேலப் போகுமோ அது போல் தான் சினிமாவும்” என உற்சாகத்துடன் பேட்டியை நிறைவு செய்தார் ராமராஜன்.