தமிழகத்தில் மதுபான விற்பனையை டாஸ்மாக் மூலம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த துறை அதிக அளவில் வருவாய் ஈட்டி வருவதால் தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதை பார்க்கலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் முதலில் செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தார். தற்போது அமைச்சர் முத்துசாமி பொறுப்பு வகித்து கொண்டிருக்கிறார்.
மதுபானங்கள் விலை உயர்வு; கொந்தளித்த மதுப்பிரியர்கள் !
டாஸ்மாக் விற்பனை
பாட்டிலுக்கு 10 ரூபாய், 5 ரூபாய் கமிஷன் என சமீபத்தில் அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்தன. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும், அந்த துறை மீதும் அதிருப்தி உண்டானது. மேலும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மாற்றவிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் வழக்கம் போல் பிற்பகல் தொடங்கி இரவு வரை செயல்படும் என்று அமைச்சர் முத்துசாமி கண்டிப்பாக கூறிவிட்டார். சமீபத்தில் தான் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு குழுக்களை டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பி வைத்தது.
வெளிமாநில ஆய்வு
அங்கு மாநில அரசின் மதுபானக் கடைகள் எவ்வாறு செயல்படுகின்றன? எவ்வாறு திறம்பட மது விற்பனையை மேற்கொள்கின்றனர்? மது பாட்டில்களை எவ்வாறு கையாள்கின்றனர்? ஊழியர்களின் சம்பளம் மற்றும் படித் தொகை போன்றவை எப்படி வழங்கப்படுகின்றன? போன்ற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் தான் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
அதாவது, நேர்மையான முறையில் செயல்படும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாம். எவ்வளவு தெரியுமா? 2,500 ரூபாய். இந்த தொகை டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் முக்கியமான இரண்டு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை முறையாக பின்பற்றினால் தான் 2,500 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.
அந்த 2 கட்டுப்பாடுகள்
ஒன்று, MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பாட்டிலுக்கு 5 ரூபாய் வேண்டும். 10 ரூபாய் வேண்டும் என்று கமிஷன் கேட்கக் கூடாது. இரண்டாவது, டாஸ்மாக் கடை வளாகத்தை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு மேற்குறிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்கின்றனர்.
விரைவில் அறிவிப்பு
இதுதொடர்பான அறிவிப்பு அமைச்சர் முத்துசாமி மூலம் விரைவில் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் உடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தினார். அதில், சில விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பாட்டில்களை கையாள நிதி
இதன் தொடர்ச்சியாக ஊக்கத்தொகை என்ற விஷயத்தை பெரிதாக பேசத் தொடங்கியுள்ளனர். மேலும் மதுபாட்டில்களை கையாள்வதற்கு தனியாக பணம் எதுவும் கொடுக்கப்படுவது இல்லை. பாட்டில்களை கையாளும் போது சேதமடைந்தால் அதற்கு ஊழியர்கள் தான் பொறுப்பு. இந்நிலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களுக்கு 100 ரூபாய் என்ற அளவில் நிதி வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.